×

ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றார்: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு

* கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்
* 10 அமைச்சர்களின் இலாகாவில் மாற்றம்

சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து 10 அமைச்சர்களின் இலாக்காக்களில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது.

இதையடுத்து மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். முதல்வரும் திமுக தலைவரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக ஆட்சி அமைந்தது முதலே பலரும், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். காரணம், திமுக தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்ததாக மக்களிடத்தில் பேசப்பட்டது உதயநிதி ஸ்டாலினின் பிரசாரம் தான். காரணம், கடந்த அதிமுக ஆட்சியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒன்றிய அரசு சார்பில் அடிக்கல் நாட்டப்பட்ட ஒரு செங்கல்லை ஊர் ஊராக கொண்டு சென்று காட்டி மக்களின் அமோக ஆதரவை பெற்றார்.

திமுக வெற்றி பெற்றதற்கு அவரது தீவிர பிரசாரமும் ஒரு காரணம் ஆகும். மேலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கட்சியில் உள்ள இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவரது நடவடிக்கைகள் அமைந்து இருந்தது என திமுக நிர்வாகிகள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது. திமுக ஆட்சி அமைந்ததும், உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராவார், அமைச்சர் ஆவதற்கு அவருக்கு எல்லா தகுதியும் உள்ளது என்று அமைச்சர்களே வெளிப்படையாக பேசி வந்தனர். இந்த நிலையில்தான் தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும், அப்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவார் என்ற பேச்சு சில மாதங்களாகவே எழுந்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த திங்கட்கிழமை பரிந்துரை செய்தார். இதனை கவர்னர் ஏற்றுக் கொண்டு, 14ம் தேதி (நேற்று) காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்கும் விழா நடைபெறும் என்று திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 9.30 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழா நடைபெற்றது.

பதவியேற்பு விழாவுக்கு அனைத்துக்கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. விழா நடைபெறும் தர்பார் ஹாலுக்கு கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் காலை 8.30 மணி முதலே வர தொடங்கினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினுடன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் 9.02 மணிக்கு கவர்னர் மாளிகை வந்தார். விழா நடைபெற்ற அரங்கத்தில் கூடி இருந்த மூத்த அமைச்சர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

பதவியேற்பு விழாவில், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் தமிழரசு, முரசொலி செல்வம், முதல்வர் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா, மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரி, கனிமொழி எம்பி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர் கோபண்ணா, காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன் மவுலானா, பாமக சட்டமன்ற தலைவர் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற கட்சி தலைவர் சிந்தனை செல்வம், மார்க்சிஸ்ட் எம்எல்ஏ நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், வேல்முருகன் எம்எல்ஏ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கவர்னர் ஆர்.என்.ரவி 9.28 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் தர்பார் ஹாலுக்கு வந்தார். அவரை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார். இதையடுத்து சரியாக காலை 9.30 மணிக்கு பதவியேற்பு விழா தொடங்கியது. முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதையடுத்து, கவர்னர் ஆர்.என்.ரவிக்கு, உதயநிதி ஸ்டாலினை தலைமை செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அமைச்சராக பதவியேற்க வரும்படி உதயநிதி ஸ்டாலினை தலைமை செயலாளர் அழைத்தார். உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை 9.33 மணி அளவில் தமிழகத்தின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார். உதயநிதி ஸ்டாலின் பதவியேற்கும் போது, ‘உளமாற உறுதி கூறுகிறேன்’ என்று கூறி பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, அமைச்சராக பதவி ஏற்ற உதயநிதி ஸ்டாலினும், கவர்னரும் உறுதிமொழி புத்தகத்தில் கையெழுத்திட்டனர். அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். அதேபோன்று, கவர்னரும், முதல்வரும் பூக்கூடை வழங்கி உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு, பதவியேற்பு விழா நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

பதவியேற்பு விழா சரியாக 8 நிமிடத்தில் முடிவடைந்தது. இதையடுத்து தமிழகத்தின் புதிய அமைச்சரவையுடன் கவர்னர் ஆர்.என்.ரவி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்தளித்தார். அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு உதயநிதி ஸ்டாலின் கவர்னர் மாளிகையில் இருந்து நேராக மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கு கலைஞரின் நினைவிடம், ‘உதயத்தை வரவேற்போம்’ என்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்தில், அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து தலைமை செயலகத்தில் உள்ள தனது அறையில் பணியை தொடங்கினார். அவருக்கு அமைச்சர்கள், கட்சியின் மூத்த முன்னோடிகள், முக்கிய நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினர் அவருக்கு பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். சென்னை திராவிடர் கழக அலுவலகத்தில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை தெரிவித்தார். உடன் தி.க. தலைவர் வீரமணி மற்றும் பலர் உடனிருந்தனர்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டதையடுத்து தமிழகத்தில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து அமைச்சர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது. அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு சென்னை, தலைமை செயலகத்தின் 2வது தளத்தில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பதவியேற்ற பின்பு,  நேற்று ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், முத்துசாமி உள்ளிட்ட 10 அமைச்சர்களின் இலாகாக்களில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் பெயர்    பழைய பதவி    புதிய பதவி
உதயநிதி ஸ்டாலின்     -----     இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள்.
இ.பெரியசாமி    கூட்டுறவு துறை    ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள்.
சு.முத்துச்சாமி    வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை     வீட்டுவசதி, ஊரக வீட்டு வசதி, நகரமைப்பு திட்டமிடுதல் மற்றும் வீட்டுவசதி மேம்பாடு, இடவசதி கட்டுப்பாடு, நகர திட்டமிடல் மற்றும் நகர்ப்பகுதி வளர்ச்சி.
கே.ஆர்.பெரியகருப்பன்    ஊரக வளர்ச்சி துறை     கூட்டுறவு துறை
எஸ்.ஆர்.ராஜகண்ணப்பன்    பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை     பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன் மற்றும் கதர் மற்றும் கிராம தொழில் வாரியம்.
கா.ராமச்சந்திரன்    வனத்துறை    சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம்.
ஆர்.காந்தி     கைத்தறி மற்றும் துணிநூல் துறை    கைத்தறி மற்றும் துணிநூல் துறை, பூதானம் மற்றும் கிராம தானம்.
பி.கே.சேகர்பாபு    இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்    இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்.
பழனிவேல் தியாகராஜன்    நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை    நிதித்துறை, திட்டம், மனித வள மேலாண்மை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வு கால நன்மைகள் மற்றும் புள்ளியியல் துறை.
சிவ.வீ.மெய்யநாதன்    சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை    சுற்றுச்சூழல் மற்றும் மாசுகட்டுப்பாட்டு துறை
எம்.மதிவேந்தன்    சுற்றுலா துறை    வனத்துறை

Tags : Udayanidhi Stalin ,Minister ,Youth Welfare ,Sports ,Governor's House , Udayanidhi Stalin sworn in as Minister: Youth Welfare and Sports Sector Allocation at a ceremony at Governor's House
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...