×

அய்யப்பன்தாங்கலில் சாலையை வழிமறித்து அதிமுக ஆர்ப்பாட்டம்: பொதுமக்கள் கடும் அவதி

பூந்தமல்லி: அய்யப்பன்தாங்கலில் சாலையை வழிமறித்து, அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். தமிழகத்தில் மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் வளர்மதி, ஒன்றிய செயலாளர் ஏசுபாதம், மாவட்ட மாணவரணி செயலாளர் ஏ.என்.இ.பூபதி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்காக, அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையத்திலிருந்து பரணிபுத்தூர் செல்லும் சாலையை வழிமறித்து தற்காலிக மேடை அமைத்திருந்தனர்.

இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆர்ப்பாட்டம் நடைபெறுவதை தொடர்ந்து பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் சாலை பகுதியிலும், கெங்கையம்மன் கோயில் பகுதியிலும் போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். இதனால் பள்ளி வாகனங்கள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் உள்பட எந்த வாகனங்களும் செல்ல முடியாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் நடந்து கூட செல்லமுடியாதபடி அந்த பகுதியில் தடை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அருகிலிருந்த தெருக்கள், சந்துகளில் புகுந்து நீண்ட தூரம் சுற்றி பேருந்து நிலையத்துக்கும், பிரதான சாலைக்கும் சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்காக வெளியிலிருந்து வேன்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் ஆட்கள் அழைத்து வரப்பட்டனர். அவ்வாறு அவர்கள் அழைத்து வந்த வாகனங்களையும் அருகிலிருந்த தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்பட்டனர். பொதுமக்கள் எந்த நேரமும் அதிகமாக பயன்படுத்தும் சாலைகளில் எந்த நிகழ்ச்சிக்கும் போலீசார் அனுமதிக்கக் கூடாது. இதுபோல சாலையை மறித்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags : AIADMK ,Ayyappanthangal , AIADMK protests by blocking the road in Ayyappanthangal: People suffer a lot
× RELATED தமிழக அரசு உடனடியாக பழைய பேருந்துகளை...