×

கொச்சியில் வரும் 23ம் தேதி ஐபிஎல் மினி ஏலம்!: வீரர்கள் பட்டியலை அறிவித்தது பிசிசிஐ.. 137 வெளிநாட்டினர் உள்பட 405 வீரர்கள் இடம்பிடித்தனர்..!!

கொச்சி: ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் அணிகள் ஏற்கனவே தேவையான வீரர்களை கைவசம் கொண்டிருந்தாலும் மேலும் சிலரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தை பெற்றுள்ளனர். இதற்கான மினி ஏலம் வரும் 23ம் தேதி கொச்சியில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு தகுதியானவர்கள் யார்? யார்? என்ற 405 வீரர்கள் கொண்ட பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஐ.பி.எல். என்றாலே ரசிகர்களுக்கு மட்டுமல்ல வீரர்களுக்கும் கொண்டாட்டம் தான். 2 மாத காலம் நடைபெறும் போட்டிக்கு லட்சங்களில் தொடங்கி கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டுவதே அதற்கு காரணம்.

அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கும் 16வது சீசனில் தக்க வைத்துக்கொள்ளும் வீரர்களையும், விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டிலையும் அணிகள் வெளியிட்டன. இதையடுத்து கைவசம் உள்ள பணத்தை கொண்டு தேவையான வீரர்களை தேர்ந்தெடுக்க அணிகள் விருப்பம் தெரிவித்தனர். அதிகபட்சமாக ஐதராபாத் சன்ரைசஸ் அணி 42 கோடி ரூபாயை விற்றுள்ளது. 13 வீரர்கள் இந்த அணிக்கு தேவையாக இருக்கிறது. கொல்கத்தா அணிக்கு 11 வீரர்களும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 7 வீரர்களும் தேவையாக இருக்கிறது. இதற்குரிய வீரர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டதும் சுமார் ஆயிரம் வீரர்கள் போட்டிபோட்டு பதிவு செய்துவிட்டனர்.

ஆனால் அவ்வளவு வீரர்களையும் இந்த மினி ஏலத்தில் பட்டியலிடுவது பெரும் காரியம் என்பதால், தேவையான வீரர்களை மட்டும் குறிப்பிடுமாறு அணி நிர்வாகங்களை பிசிசிஐ கேட்டுக்கொண்டது. அதன்படி 405 வீரர்கள் ஏல பட்டியலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். இதில் 137 வெளிநாட்டு வீரர்களும் உட்படும். அதிகபட்சமாக இங்கிலாந்தில் இருந்து 27 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர். அடுத்தபடியாக தென்னாப்பிரிக்காவில் இருந்து  22 வீரர்களும், ஆஸ்திரேலியாவில் இருந்து 21 வீரர்களும், மேற்கிந்திய தீவுகளில் இருந்து 20 வீரர்களும் இந்த மினி ஏலத்திற்கு பட்டியலிடப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், சமீபத்தில் முடிவுற்ற 20 ஓவர் உலகக்கோப்பையில் ஜொலித்த சாம் கர்ரன், ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜேசன் ராய், வெஸ்ட்இன்திஸின் நிகோலஸ் பூரன் ஆகியோரும் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து பாபா இந்திரஜித், பாபா அபரஜித், கோவை வீரர் ஜெகதீசன் உள்ளிட்ட 16 வீரர்கள் அணிவகுக்கின்றனர். மொத்தத்தில் 87 வீரர்களே அணிகளுக்கு தேவைப்படுகின்றனர். எனவே அந்த எண்ணிக்கையை எட்டியதும் ஏலமும் முடிவுக்கு வந்துவிடும். இந்த மினி ஏலம் கொச்சியில் வரும் 23ம் தேதி மதியம் 2:30 மணிக்கு தொடங்கவுள்ளது.


Tags : IPL ,Kochi , Kochi, IPL Mini Auction, Players List, BCCI
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி