×

பாடி மேம்பாலம் அருகே பரபரப்பு 340 சவரன் நகையுடன் மயங்கி கிடந்தவர் மீட்பு: உரியவர்களிடம் நகைகள் ஒப்படைப்பு; உயரதிகாரிகள், பொதுமக்கள் போலீசாருக்கு பாராட்டு

சென்னை: சென்னை திருமங்கலம் பாடி மேம்பாலத்துக்கு கீழே, நேற்று நள்ளிரவு ஒருவர் உடல் முழுவதும் பலத்த ரத்த காயங்களுடன் சுயநினைவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில், மதுரவாயல் இன்ஸ்பெக்டர் சிவஆனந்த் மற்றும் போலீசார் அவ்வழியாக நள்ளிரவு ரோந்து வாகனத்தில் வந்தனர். ரத்தவெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தவரை சக போலீஸ்காரர்கள் உதவியுடன் மீட்டு, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, அந்த நபர் கிடந்த இடத்தில் இருந்து பைக்கை கைப்பற்றிய சிவஆனந்த் அதில் இருந்த  பையில் முகவரி ஏதாவது உள்ளதா என்று சோதனை செய்தார். அப்போது அதில் 340 சவரன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நகைகள் அனைத்தையும் அண்ணாநகர் உதவி ஆணையர் ரவிச்சந்திரனிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும், படுகாயம் அடைந்த நபரின் செல்போனில் கடைசியாக பேசியவரின் எண்ணை தொடர்பு கொண்டு போலீசார் பேசினர்.
அப்போது, எதிர்முனையில் பேசிய நபர், ‘‘தான்  சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல நகை கடை உரிமையாளர் கதிரவன். காயமடைந்தவர் மேற்கு மாம்பலம் காந்திநகர் பகுதியை சேர்ந்த ஹரிகரன்(54).  

நேற்று நள்ளிரவு புழல் பகுதியில் உள்ள நகை பட்டறையில் இருந்து, ஆர்டர் செய்திருந்த ரூ.1கோடி மதிப்புள்ள 340 சவரன் நகையை வாங்கி வர சொல்லி அனுப்பினேன்’’ என்று தெரிவித்தார். பின்னர், கதிரவனை அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு வரவழைத்த உதவி ஆணையர் ரவிச்சந்திரன்  340 சவரனை அவரிடம் ஒப்படைத்தார். அதனைப் பெற்றுக்கொண்ட கதிரவன் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் சிவஆனந்த் மற்றும் போலீசாருக்கு நன்றி  தெரிவித்தார். நள்ளிரவில் ரத்தவெள்ளத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய நபரை மீட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தும், அவர் வைத்திருந்த நகைகளை உரியவரிடம் சேர்த்த போலீசாரின் செயலை  உயரதிகாரிகள்  மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags : Badi Membalam , Busy 340 near Badi Membalam Rescue of person who fainted with Shavaran jewels: Handover of jewels to the rightful ones; Appreciation for the dignitaries and civilian police
× RELATED கடலில் கலந்து மழைநீர் வீணாவதை தடுக்க...