×

தேன்கனிக்கோட்டை அருகே கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை கன்றுக்குட்டியை கொன்றதால் பீதி-பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை அருகே கன்று குட்டியை சிறுத்தை அடித்து கொன்றதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, தளி வனப்பகுதியில் சிறுத்தை, யானை, மான், முயல், கரடி, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் அதிகமாக உள்ளன. இந்நிலையில், தேன்கனிக்கோட்டை அருகே பனசமான்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த பத்ரப்பா மகன் ராஜேஷ்(30) என்பவரது கொட்டகையில் கட்டி வைத்திருந்த கன்றுக்குட்டி மாயமானது.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ், கன்றுக்குட்டியை தேடிச் சென்ற போது, கிராமத்தை ஒட்டியுள்ள வயலில், மர்ம விலங்கு கடித்து, பாதி சாப்பிட்ட நிலையில் கன்றுக்குட்டி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது குறித்து, ஜவளகிரி வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், வனச்சரக அலுவலர் சுகுமார் மற்றும் வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது, அந்த பகுதியில் சிறுத்தையின் கால் தடம் பதிவாகி இருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து, கன்றுக்குட்டியை அடித்துக் கொன்றது சிறுத்தை தான் என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். பின்னர், வனத்தை ஒட்டியுள்ள பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா வைத்து, சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். கன்றுக்குட்டியை சிறுத்தை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சிறுத்தையை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Panic-Forest ,Dhenkanikottai , Dhenkanikottai: People are scared after a leopard killed a calf near Dhenkanikottai. Krishnagiri.
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு