பாதையை மறித்து சுவர் கட்டியதால் வீட்டுக்கு ஹெலிகாப்டரில் செல்ல அனுமதி கேட்டு மனு: பென்னாகரம் விவசாயி நூதன கோரிக்கை

தர்மபுரி: குடும்பத்துடன் வந்த விவசாயி, தனது வீட்டுக்கு செல்ல பயன்படுத்திய பாதையை மறித்து சுவர் கட்டியதால், ஹெலிகாப்டரில் செல்ல அனுமதி கேட்டு, கலெக்டரிடம் மனு வழங்கினார். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடி கே.அக்ரஹாரத்தை சேர்ந்த விவசாயி கணேசன்(57). இவர் நேற்று மனைவி சந்திரா மற்றும் 2 மகள்களுடன், கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்துக்கு பொம்மை ஹெலிகாப்டருடன் வந்து, கலெக்டர் சாந்தியிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில், எனது வீட்டிற்கு செல்லும் பாதையை, கடந்த 3 தலைமுறையாக நாங்கள் பயன்படுத்தி வந்தோம்.

6 மாதத்துக்கு முன்பு, எனது வீட்டை சுற்றிலும் உள்ள நிலத்தின் உரிமையாளர்கள், பாதையை மறித்து சுவர் கட்டி விட்டனர். இதனால் வீட்டிற்கு செல்ல முடியவில்லை. இதுகுறித்து கேட்ட போது, எனது நிலத்தில் சுவர் கட்டியுள்ளேன். பாதை விட முடியாது என கூறுகின்றனர். ஒகேனக்கல் போலீசார், பென்னாகரம் டிஎஸ்பி, மாவட்ட எஸ்பி., மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நான் குடும்பத்துடன் பென்னாகரம் டவுனில், வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனது வீட்டை சுற்றி நான்கு திசைகளில் உள்ளவர்கள், வழிவிடாமல் தடுத்து தொடர்ந்து பிரச்னை செய்து வருவதால், நாங்கள் எங்கள் சொந்த வீட்டிற்குள் ஹெலிகாப்டரில் சென்று வர அனுமதி அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Related Stories: