×

தொடர் கன மழையால் நீர்வரத்து அதிகரிப்பு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3,000 கனஅடி நீர் திறப்பு

சென்னை: தொடர் கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், 3000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல் கடந்த 3 தினங்களுக்கு முன் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. முன்னதாக, நேற்று காலை வரை தொடர்ந்து 4 தினங்களுக்கும் மேலாக சென்னை புறநகர் பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வந்தது. இந்த, நிலவரப்படி ஏரிக்கு வரும் நீர்வரத்து மணிக்கு 3407 கன அடியாக இருந்தது. மேலும், ஏரியில் தற்போது மொத்த உயரமான 24 அடியில் தற்போது 22.43 அடி வரை தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில், ஏரிக்கு வரும் உபரிநீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாதுகாப்பு கருதி, கடந்த வாரத்தில் ஏரியில் இருந்து 100 முதல் 200 கன அடி வீதம் உபரிநீர் திறந்து விடப்பட்டது. தற்போது வரை சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவின்பேரில், முதற்கட்டமாக  நேற்று காலை 10 மணியளவில் 1000 கன அடியும், கனமழையின் காரணமாக மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், பிற்பகல் 12 மணிக்கு மேலும், 1000 கன அடி என 2000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மாலை 4.30 மணிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து, நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீரின் அளவும் கூடும் என்று ஏரியை கண்காணித்து வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, செம்பரம்பாக்கம் ஏரி கரையோரம் வசிக்கும் மக்கள் மீன் பிடிக்கவோ, குளிக்கவோ தேவையில்லாமல் நீர் செல்லும் வழித்தடத்தில் இறங்க வேண்டாம். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோடைகால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக தொடர்ந்து ஏரியின் நீர்மட்டத்தை தகுந்த அளவில் இருப்பு வைக்கும் வகையில் அதிகாரிகள் ஏரியை இரவு, பகலாக கண்காணித்த வண்ணம் உள்ளனர். இதனிடையே ஏரி நிறைந்து, கடல்போல் காட்சியளிக்கும் அழகை அருகில் வசிக்கும் பொதுமக்கள் ஏராளமானோர் வந்து கண்டுகளித்தனர்.

Tags : Chembarambakkam lake , 3,000 cubic feet of water released from Sembarambakkam lake due to continuous heavy rains
× RELATED துண்டு துண்டாக வெட்டி காவலாளி கொலை;...