×

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நாளை பதவியேற்பு: கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்

சென்னை: தமிழக அமைச்சரவையில் திமுக இளைஞர் அணி செயலாளரும் , சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் நாளை, புதிய அமைச்சராக பதவி ஏற்கிறார். இதனால், தமிழக அமைச்சரவையின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 2021 ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடந்தது. அதில் திமுக ஒரு அணியாகவும், அதிமுக மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். அதோடு கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சியும் போட்டியிட்டன. மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

அதில் திமுக மட்டும் 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்ந்தது. காங்கிரஸ் 18 இடங்களில் வென்றது. மதிமுக (உதயசூரியன் சின்னம்), விசிக தலா 4 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மமக தலா 2 தொகுதிகளிலும், கொமதேக, தவாக ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றனர். அதிமுக கூட்டணி 75 இடங்களை மட்டுமே பெற்றது. அதில் பாமக 5 இடங்களிலும், பாஜ 4 இடங்களிலும், புரட்சி பாரதம் (இரட்டை இலை சின்னம்) ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. தனிப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவை 2021ம் ஆண்டு மே 7ம் தேதி பதவி ஏற்றது.

தமிழக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அமைச்சரவையில் இடம் வழங்கப்படும். அதன்படி தமிழகத்தில் 35 பேர் வரை அமைச்சர்களாக பதவி ஏற்கலாம். ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். ஒரு இடம் காலியாக இருந்தது. இந்தநிலையில், திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்லாமல், அமைச்சர்கள், மூத்த தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வந்தனர்.

குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மூத்த தலைவர்களும், அமைச்சர்களும் கோரிக்கை விடுத்தனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. தமிழகம் முழுவதும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இதனால் அவர் எங்கு சென்றாலும் எப்போது அமைச்சராவீர்கள் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. தலைமை உத்தரவிட்டால் பதவி ஏற்பேன் என்று அவர் கூறி வந்தார். இந்த நிலையில் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள், இளைஞர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பரிந்துரை செய்தார்.

அதைத் தொடர்ந்து நேற்று இரவு கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வரின் பரிந்துரையைத் தொடர்ந்து சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக நியமிப்பதற்கான ஒப்புதலை கவர்னர் வழங்கினார். இதனால் வருகிற 14ம் தேதி (நாளை) காலை 9.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் உதயநிதி ஸ்டாலின் பதவி பிரமாண நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. திமுக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதை தொடர்ந்து, அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது கவர்னர் மாளிகையில் இருந்து உதயநிதி ஸ்டாலின் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளதால், புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு குறித்து வெளியான பல்வேறு தகவல்கள் அனைத்தும் கற்பனை மற்றும் யூகங்கள் என்று தெரியவந்துள்ளது. அமைச்சராக பதவி ஏற்ற பிறகு, உதயநிதி ஸ்டாலினுக்கான இலாகா விவரங்கள் முறையாக அறிவிக்கப்படும். அதன்பின்னரே இலாகா மாற்றம் குறித்து தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் இளைஞர்கள்  மத்தியில் கோரிக்கை எழுந்தது. திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்லாமல், அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வந்தனர்.

Tags : Chepakkam - Tiruvallikkeni ,Udayanidhi Stalin ,Governor ,RN Ravi , Chepakkam - Tiruvallikkeni MLA. Udhayanidhi Stalin to be sworn in as minister tomorrow: Governor RN Ravi will administer the oath of office
× RELATED திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை