×

நாட்டரசன்கோட்டையில் கல்வட்டம், முதுமக்கள்தாழி கண்டெடுப்பு

சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை பகுதியில் கல்வட்டங்கள், முதுமக்கள்தாழிகள், இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நாட்டரசன்கோட்டையில் பெருங்கற்கால கல்வட்டங்கள், முதுமக்கள்தாழிகள், இரும்பு உருக்காலை எச்சங்கள் இருப்பதாக கிடைத்த தகவலையத்து அங்கு சிவகங்கை தொல்நடை குழு நிறுவநர் காளிராசா, நிர்வாகிகள் சரவணன், முத்துக்குமரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வு குறித்து அவர்கள் தெரிவித்ததாவது: மதுரை சாலையில், நாட்டரசன்கோட்டை எல்கைப்பகுதியில் உள்ள காட்டில் சுமார் 3500 ஆண்டுகளுக்கு பழமையான கல்வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பெருங்கற்காலத்தில் இறந்தவர்களின் உடல்களை, எச்சங்களை பாதுகாக்க நம் முன்னோர் பெரு முயற்சி எடுத்து கல்வட்டங்களை அடுக்கியுள்ளனர். அங்கு கிடைக்கக்கூடிய கல் வகைகளைக் கொண்டு அக்கல்வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மலைப்பகுதிகளில் வெள்ளை கற்களாலும் சிவகங்கை மாவட்டம் போன்ற செம்மண் நிறைந்த பகுதிகளில் கிடைக்க பெறும் செம்புராங்கற்களாலும் கல்வட்டங்கள் அடுக்கப்பட்டுள்ளன. இங்கு 7 கல்வட்டகளுக்கு மேல் காணப்படுகின்றன. அவற்றில் மூன்று, சிதைவுறாமல் காணப்படுகின்றன.

உலகில் மற்ற நாட்டினர் இரும்பு பயன்பாட்டை அறியும் முன்னரே தமிழர்கள் இரும்பின் பயன்பாட்டையும் அதை உருவாக்கவும் அறிந்திருந்தனர். இப்பகுதியில் இரும்பு உருக்காலை எச்சக்கழிவுகளான இரும்பு துண்டுகள் போன்ற கற்களும் மண்ணாலான குழாய்களும் காணப்படுகின்றன. இந்த காட்டை அடுத்து ஓடை ஒன்று உள்ளது. அந்த ஓடையின் கரையில் மூன்று முதுமக்கள்தாழிகள் சிதைவுற்ற நிலையில் உள்ளன. ஓடைக்கு முன்பு உள்ள இந்த காட்டுப்பகுதி வனத்துறையின் கீழ் வருவதால் கடந்த செப்டம்பர் மாதம் வனத்துறையினருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட பகுதியில் தொடர்ச்சியாக கல்வட்டங்கள், இரும்பு உருக்காலைகள், முதுமக்கள்தாழிகள் கிடைக்கின்றன என்பதிலிருந்து இப்பகுதிகள் பழங்காலமாக பண்பாடு நிறைந்த மக்கள் வாழ்ந்த பகுதி என்பதை உறுதி செய்ய முடிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Natarasankottai , Discovery of Kalvattam, Muthumakaktazhi at Natarasankottai
× RELATED விலையில்லா சைக்கிள் வழங்கல்