×

கல்வராயன்மலையில் கனமழை; கொசப்பாடி ஏரி நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது: ராட்சத பாறை உருண்டு போக்குவரத்து துண்டிப்பு

சின்னசேலம்: கல்வராயன்மலையில் பெய்த கனமழையால் கொசப்பாடி ஏரி நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் சாலையில் ராட்சத பாறை உருண்டு கிடப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கிராமங்களில் மாண்டஸ் புயலின் தாக்கத்தின் காரணமாக துரூர், மட்டப்பாறை, தும்பை, பாச்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. அதைப்போல கொசப்பாடி பகுதியிலும் மழை பெய்தது. கொசப்பாடி ஏரி மலையடிவாரத்தில் இருப்பதால் ஓடை நீர் ஏரியில் புகுந்தது, நள்ளிரவில் ஏரி நிரம்பியது. இதையடுத்து இன்று அதிகாலை  ஏரியில் நீர் வழிந்து வெளியேறி ஊருக்குள் சென்றது. இதனால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் விடிய, விடிய சாலையில் தஞ்சமடைந்தனர்.

கொசப்பாடி ஏரியில் இருந்து ஏரி கோடி வழியாகவும், மதகு வழியாகவும் வெளியேறும் நீர் வயல்களில் புகுந்ததால் சுமார் 50 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. தொடர்ந்து கல்வராயன்மலையில் இருந்து நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மதகு உடையும் அபாயத்தில் உள்ளது. ஆகையால் அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு ஏரி உடையாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம், தங்குமிடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதைப்போல மண்மலை கிராமத்தில் ஆக்கிரமிப்பால் சுடுகாட்டு ஓடை குறுகியதால் மழைநீர் பக்கத்து வயல்களில் புகுந்து கடல்போல காட்சியளிக்கிறது. மழையால் ஒரு கூரை வீடும் இடிந்து விட்டது.கல்வராயன்மலையில் உள்ள துரூர் சாலையில் ராட்சத பாறை உருண்டதால் போக்குவரத்து தடைபட்டது. மேலும் அதன் அருகில் இருந்த தரைப்பாலமும் மழை நீரில் அரித்து செல்லப்பட்டது. அந்த கிராமத்தில் வயல்களில் ஓடை நீர் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

Tags : Kalvarayanmalai ,Kosappadi , Heavy rain in Kalvarayanmalai; Kosappadi lake fills up and water enters the town: Giant rock roll disrupts traffic
× RELATED சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முட்டல் ஆணைவாரி அருவியில் குளிக்க தடை!