மும்பை: ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் ஆடுகிறது. இதில் முதல் டி.20 போட்டிகளில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில் 2வது போட்டி நேற்றிரவு மும்பை டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்தது. தொடக்க வீராங்கனை மூனி 82, மெக்ராத் 70 ரன் எடுத்தனர்.
இதையடுத்து 188 ரன் இலக்கை துரத்திய இந்திய அணியில், ஷபாலி வர்மா 34 ரன்(23பந்து), ஸ்மிருதி மந்தனா 49 பந்துகளில் 4 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 79 ரன் விளாசினர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 21 ரன்னில் வெளியேற கடைசி கட்டத்தில் ரிச்சா கோஷ் 13 பந்தில் 3 சிக்சர் உள்பட 26 ரன் அடித்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன் தேவைப்பட இந்தியா 13 ரன் எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.
இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் வீசப்பட்டது. முதலில் ஆடிய இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 2 சிக்சர் உள்பட 20 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 17 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது. ஸ்மிருதி மந்தனா ஆட்டநாயகி விருது பெற்றார். இந்த வெற்றி மூலம் 1-1 என இந்தியா தொடரை சமன் செய்த நிலையில், 3வது போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.
வெற்றிக்கு பின் ஆட்டநாயகி ஸ்மிருதி மந்தனா கூறுகையில், அவர்கள் பேட்டிங் செய்யும்போது, அது ஒரு அற்புதமான பேட்டிங் பிட்ச் என்பதை உணர்ந்தேன், பெரிய ஸ்கோரை நோக்கி என் கண்கள் இருந்தது. கடந்த இன்னிங்ஸ் செய்த அதே தவறை செய்ய விரும்பவில்லை. மகளிர் கிரிக்கெட்டுக்காக இதுபோன்ற பிட்ச் தயார் செய்வதைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள், அதிக ஸ்கோர்கள், அதிக ரன் சேஸிங்குகளைப் பெறுவீர்கள். நாம் அனைவரும் ஒரு பகுதியாக இருந்த மிகவும் பொழுதுபோக்கு விளையாட்டுகளில் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன், என்றார்.
பூனைக்கு (ஆஸி) மணிகட்டிய இந்தியா: ஆஸ்திரேலிய மகளிர் அணி ஒரு டெஸ்ட் டிரா, 9 டி.20 போட்டி, 12 ஒருநாள் போட்டி என இந்த ஆண்டு ஆடிய 22 போட்டிகளிலும் தோல்வியே சந்திக்காமல் இருந்தது. இதற்கு நேற்று இந்தியா முடிவு கட்டியது. மேலும் தொடர்ச்சியாக 16 டி.20 போட்டிகளில் வென்ற ஆஸி.யின் சாதனையையும் இந்தியா முடிவுக்கு கொண்டு வந்தது. இதற்கு முன் 26 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றிருந்த ஆஸி.யின் சாதனைக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியா முட்டுக்கட்டை போட்டது குறிப்பிடத்தக்கது.
