×

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரள கமிட்டி ஒப்புதல்: தமிழ்நாடு, கேரள மாநில அரசு அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை..!!

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணைக்கு கீழ் பகுதியில் புதிய அணை கட்ட கேரள அரசு அமைத்த தொழில்நுட்பக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. கேரள நீர்பாசனக்துறை, வனத்துறை அதிகாரிகள் அடங்கிய தொழில்நுட்பத் குழு ஒப்புதல் அளித்துள்ளது. புதிய அணை கட்டுவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கேரள அரசு அமைத்த குழு கருத்து தெரிவித்திருக்கிறது. ஐதராபாத்தைச் சேர்ந்த பிரகதி லேப்ஸ் அண்ட் கன்சல்டன்ஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் அணை தொடர்பான பணியை கேரள அரசு ஒப்படைத்திருந்தது.

தனியார் நிறுவனம் அளித்த 3 தொகுதிகள் கொண்ட பரிந்துரைகளை கேரள அரசின் தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்து தற்போது அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தற்போதைய முல்லைப்பெரியாறு அணைக்கு பதில் புதிய அணை கட்ட 125 ஏக்கர் நிலப்பகுதியை கேரள அரசு அடையாளம் கண்டுள்ளது. அடையாளம் காணப்பட்டுள்ள புதிய இடத்தில் அணை கட்டினால் சுற்றுச்சூழல் பாதிக்குமா? என்பது குறித்து தனியார் நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. தற்போதைய அணையில் இருந்து 366 மீட்டர் கீழ் பகுதியில் புதிய அணை கட்ட கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

கேரள அரசு நியமித்த தொழில்நுட்ப கமிட்டியின் அறிக்கையை அடுத்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி முல்லை பெரியாறில் ரூ.600 கோடியில் புதிய அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே புதிய அணை கட்ட கேரள அரசு தீட்டிய திட்டம், தமிழ்நாடு அரசின் எதிர்பால் கைவிடப்பட்ட நிலையில் தற்போது கேரளா புதிய திட்டம் தீட்டுகிறது. முல்லை பெரியாறு அணை தொடர்பாக தமிழ்நாடு, கேரள மாநில அரசு அதிகாரிகள் இன்று சென்னையில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.


Tags : Kerala Committee ,Mullaip Periyar ,Tamil Nadu ,Kerala , Mullaip Periyar, New Dam, Kerala Committee
× RELATED முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட...