×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல மாவட்டங்களில் தீபாவளி சிட்பண்ட் நடத்தி ரூ.9.89 கோடி மோசடி: போலீசில் ஒரே நாளில் 48 பேர் புகார்

செய்யாறு: தீபாவளி சிட்பண்ட் நடத்தி காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல மாவட்டங்களில் ரூ.10 கோடி மோசடி செய்த நிறுவனத்தின் மீது போலீசில் 48 பேர் புகார் செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சிட்பண்ட் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு தீபாவளி சிட்பண்ட் நடத்தி வந்தது. செய்யாறு, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகவர்கள் மூலம் பல லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை சீட்டில் சேர்த்தனர்.

ஆனால் தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் விநியோகிக்க முடியாமல் நிறுவனம் திணறியுள்ளது. இதையறிந்த வாடிக்கையாளர்கள் பல்வேறு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வாட்ஸ்அப் பதிவு மூலம் உத்தரவாதம் அளித்தார். மேலும் நிறுவனம் சார்பில் பாண்டு பத்திரம் எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கான கெடுநாள் டிசம்பர் 10ம்தேதி என குறிப்பிட்டு இருந்தார்களாம்.

எனவே, நேற்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வந்தவாசி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட முகவர்கள் செய்யாறு நகரில் பாவாடை மூர்த்தி விநாயகர் கோயில் தெருவில் உள்ள இதே நிறுவனத்தின் மற்றொரு அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அந்த அலுவலகம் பூட்டி இருந்ததால் அதிர்ச்சியடைந்த முகவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சில பெண் முகவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் நேரில் வர வேண்டும் எனக்கூறி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் காந்தி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், போலீசார் ‘பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தனர்.

இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு போலீசில் புகார் செய்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 48 முகவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி ரூ.9.89 கோடி மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

Tags : Diwali Chitband ,Kanchipuram ,Chengalpattu , Kanchipuram, Chengalpattu, Diwali Chitband, Fraud: Police,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்