×

தொடர் மழையால் நிரம்பிய அணைகள் பயிர் விளைச்சல் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்பு: உத்தமபாளையம் விவசாயிகள் மகிழ்ச்சி

உத்தமபாளையம்: உத்தமபாளையம் தாலுகாவில் அணைகள் நீர் இருப்பு குறையாமல் இருப்பதால் விவசாயம் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உத்தமபாளையம் தாலுகாவில் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் மிக முக்கியமான முல்லைப் பெரியாறு அணை உள்ளது. இதை போல் ராயப்பன்பட்டியில் சண்முகாநதி அணை உள்ளது. தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், உள்ளிட்ட ஊர்களை சுற்றிலும் 40க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன.

தேனி மாவட்டத்தில் வழக்கமாக பெய்யும் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை, கோடைமழை கடந்த 2021- 22 ஆம் ஆண்டில் அதிகளவில் பெய்துள்ளது. இதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி உள்ளன. விவசாய பணிகளில் விவசாயிகள் எந்த வித தொய்வும் இல்லாமல் தொடர்ந்து செய்து வருகின்றனர். கம்பம் பள்ளத்தாக்கில் அதிக அளவில் நெல் விவசாயம் நடக்கிறது. இதற்கு அடுத்தபடியாக தென்னை, வாழை, திராட்சை, உள்ளிட்ட விவசாயமும் நடைபெற்று வருகிறது. கிராமப்புறங்களை சுற்றிலும் அதிக அளவில் முருங்கை, பீட்ரூட், தக்காளி, கோவர்க்காய், வெண்டை, வெங்காயம், பீன்ஸ், புடலங்காய், பாகற்காய், உள்ளிட்ட விவசாயம் நடக்கிறது.

இந்தாண்டு பெய்த தொடர் மழை காரணமாக குளங்கள், கண்மாய்களில் நீர் இருப்பு அதிகமாகி உள்ளது. மறுபுறம் கிணறுகளின் நீர்மட்டம் பெருகி உள்ளது. தோட்டங்களில் போடப்பட்டுள்ள போர்வெல்களில் அதிக தண்ணீர் இருக்கிறது. இதனால் விவசாயம் தங்கு தடையின்றி நடக்கிறது. இதனால் விவசாய பரப்பு அதிகரித்து வருகிறது. வரும் ஆண்டில் உத்தமபாளையம் தாலுகாவில் இயல்பைவிட 50 சதவீதம் அதிகமான விளைபயிர்கள் விளைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக காய்கறி உற்பத்தி பன்மடங்கு பெருக தண்ணீர் வளம் விவசாயிகளுக்கு பெரிதும் உதவி உள்ளது.

மறுபுறம் நெல் விவசாயத்தில் ஒவ்வொரு வருடமும் அதிகமான பூச்சிகொல்லி மருந்துகள், உரங்களை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் கடந்த வருடம் முதல் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, உரங்களின் தேவை குறைந்ததுடன், பூச்சி கொல்லி மருந்துகளும், அதிகளவில் போடப்படவில்லை.
இந்த இரண்டாம் போக நெல் சாகுபடியிலும், இதே நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இயற்கை தேவையும், இந்த வருடம் கால சூழல் மாற்றம் விவசாயத்திற்கு கைகொடுத்துள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

*திமுக ஆட்சியில் தன்னிறைவு

2021ம் வருடம் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு அதிகமான மழை கொட்டி உள்ளது. காய்ந்து கிடந்த கண்மாய்கள், குளங்கள் நிரம்பி வருகின்றன. விவசாயத்தில் பசுமைப் புரட்சி சப்தமில்லாமல் ஏற்பட்டு வருகிறது. தண்ணீர் அதிகமாக உள்ளதால், விவசாயிகள் தாமாகவே பயிர்களை விளைவித்து வருகின்றனர். உள்ளூர் தேவைகள் மட்டும் அல்லாமல் அதிகமான அளவில் காய்கறிகள் கேரளாவிற்கும், தேங்காய் மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் செல்கிறது. தேனி மாவட்டத்தில் வெளிமாநிலங்களுக்கும் காய்கறிகள், கொண்டு செல்லப்படுகிறது.


Tags : Uthamapalayam , Incessant rains, full dam, crop yield, opportunity to increase, Uttamapalayam farmer, happy
× RELATED பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி