×

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள காவல் நிலையம் மீது ‘ராக்கெட் லாஞ்சர்’ தாக்குதல்: பஞ்சாப்பில் பதற்றம்

தர்ன் தரன்: பஞ்சாப் எல்லையில் உள்ள காவல் நிலையம் மீது இன்று அதிகாலை ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடந்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப் மாநிலத்தின் தர்ன் தர்ன் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் அமிர்தசரஸ்-பதிண்டா நெடுஞ்சாலையில் சர்ஹாலி காவல் நிலையம் மீது இன்று அதிகாலை ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் காவல் நிலையக் கட்டிடம் சிறிய அளவில் சேதம் அடைந்துள்ளதாகவும், இன்று அதிகாலை 1 மணியளவில் தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும் இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இச்சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘சர்ஹாலி காவல் நிலையத்தில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபரால், ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காவல் நிலைய கட்டிடத்தின் கண்ணாடிகள் உடைந்துள்ளன. கட்டிடத்தின் ஒருபகுதி சேதமடைந்துள்ளது. ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தியவர் குறித்து விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட நபர் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

தர்ன் தரன் எஸ்எஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார், காவல் நிலையத்திற்குள் விழுந்த ராக்கெட்டையும், தேசிய நெடுஞ்சாலையில் பைப் வகை ராக்கெட்-லாஞ்சரின் ஒரு பகுதியை மீட்டு விசாரித்து வருகின்றனர்’ என்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதாவது மே 8ம் தேதியன்று, மொஹாலியில் உள்ள பஞ்சாப் காவல்துறையின் புலனாய்வுத் தலைமையகத்தில் ராக்கெட் மூலம் செலுத்தப்படும் கையெறி குண்டு வீசப்பட்டது. அலுவலக நேரம் முடிந்து மாலையில் தாக்குதல் நடத்தப்பட்டதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அப்போதும் புலனாய்வு தலைமையக சுவரின் ஒரு பகுதியையும், கண்ணாடிப் பலகையும் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : India ,Pakistan ,Punjab , 'Rocket launcher' attack on police post on India-Pakistan border: tension in Punjab
× RELATED இந்தியாவில் தேர்தல் நடக்கும்போது...