
திண்டுக்கல்: சிறுமலை அருகே சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 71 கிலோ சந்தன கட்டைகள், மரம் வெட்ட பயன்படுத்திய கோடாரி, ரம்பம் மற்றும் நாட்டுத்துப்பாக்கி, ஏர்கன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை அருகே தென்மலை பகுதியில் சந்தன மரக்கட்டைகள் கடத்தி செல்லப்படுவதாக வன பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் தென்மலை பகுதியில் வன பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றனர்.
அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் நடந்து வந்த 2 பேரை பிடித்து வன பாதுகாப்பு படையினர் விசாரணை செய்தனர். ஆனால் ஒருவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். மற்றொருவரை பிடித்து வன பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சாணார்பட்டி அருகே கவராயப்பட்டியை சேர்ந்த செல்வம் (எ) சின்னத்தம்பி(39) என்பதும், தென்மலை கன்னுக்குட்டிபாறையில் உள்ள தனியார் தோட்டத்தில் தங்கி வேலை செய்ததும் தெரியவந்தது. தப்பியோடியவர் தென்மலையை சேர்ந்த ராஜேந்திரன்(45) என்பதும், 2 பேரும் சேர்ந்து கன்னுக்குட்டிபாறை பகுதியில் இருந்த சந்தன மரத்தை வெட்டி துண்டுகளாக்கி, பைகளில் கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சின்னத்தம்பியை, சிறுமலை வனத்துறையினரிடம் வன பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிந்த வனத்துறையினர் சின்னத்தம்பியை கைது செய்தனர். அவரிடமிருந்து 71 கிலோ சந்தன கட்டைகள், மரம் வெட்ட பயன்படுத்திய கோடாரி, ரம்பம், அரிவாள், நாட்டுத்துப்பாக்கி, ஏர்கன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய ராஜேந்திரனை தேடி வருகின்றனர்.