×

இமாச்சல் புதிய முதல்வர் யார்?; காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் ஆலோசனை: கார்கேவுக்கு அனுமதி கொடுத்து தீர்மானம்

சிம்லா: இமாச்சல் புதிய முதல்வரை தேர்வு செய்யும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சித்தலைவர் கார்கேவுக்கு அனுமதி கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இமாச்சலபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜவை வீழ்த்தி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 68 இடங்களில் 35 இடங்களில் வெற்றி பெற்றாலே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.
பா.ஜ.க. 25 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதில் 23 பேர் முதல்முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  புதிய முதல்வருக்கான போட்டியில் 6 முறை  முதல்வராக இருந்த வீரபத்திரசிங் மனைவியும், காங்கிரஸ் மாநில தலைவருமான  பிரதீபா சிங், முன்னாள் மாநில தலைவர் சுக்வீந்தர் சிங் சுக்கு, சட்டப்பேரவை  எதிர்க்கட்சி தலைவராக இருந்த முகேஷ் அக்னிகோத்திரி, மூத்த தலைவர் ஹர்ஷ்வர்தன் சவுகான் ஆகியோர் இருந்தனர்.

இங்கு புதிய முதல்வரை தேர்வு செய்ய  சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், முன்னாள் அரியானா முதல்வர்  பூபிந்தர்சிங் ஹூடா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் இமாச்சல் மேலிட  பார்வையாளர் ராஜீவ் சுக்லா, மூத்த காங்கிரஸ் தலைவர் கரண்சிங் தலால் ஆகியோர் சிம்லா சென்று கவர்னர் ராஜேந்திர விஷ்வநாத்  அர்லேக்கரை சந்தித்தனர். பின்னர் இரவு 8 மணி அளவில் சிம்லாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்  கூட்டம் நடந்தது. இதில் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு புதிய  முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரத்தை வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலிட பார்வையாளர்கள்: வந்த கார் முற்றுகை: காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் சிம்லாவில் உள் ஓபராய் சிசில் ஓட்டலுக்கு சென்றனர். அப்போது சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் காரை முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ள பிரதீபா ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு கோஷ் எழுப்பினர்.

இதுபற்றி பிரதீபாவிடம் கேட்ட போது,’ தேர்தலுக்கு முன்பாக கட்சியை வழிநடத்தும் பொறுப்பை சோனியா  என்னிடம் கொடுத்தார். எனவே மாநிலத்தை முதலமைச்சராக வழிநடத்த முடியும் என்று நினைக்கிறேன். அவர்கள் என்னை முதல்வராகப் பொறுப்பேற்க உத்தரவிட வேண்டும். அந்த பணியை நான் கண்ணியத்துடன் செய்வேன்.  வீர்பத்ர சிங்கின் பெயரால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவரது குடும்பத்தை ஓரங்கட்டுவது சரியல்ல. மக்கள் வீரபத்ர சிங்குடன் வலுவான உணர்வுப்பூர்வமான தொடர்பைக் கொண்டிருப்பதால்தான் நாங்கள் 40 இடங்களை வென்றோம்’ என்றார்.

Tags : Imachal ,Congressional ,MLA ,Carke , Who is the new Chief Minister of Himachal?; Advice to Congress MLAs: Resolution giving permission to Kharg
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...