×

போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவது அதிகரிப்பு; காரணங்களை அரசு கண்டறிய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:
2021-22ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் போக்சோ சட்டத்தின்கீழ் 4020 வழக்குகள் தொடரப்பட்டன. ஏற்கனவே நிலுவையில் இருந்த வழக்குகளையும் சேர்த்து அந்த ஆண்டில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களில் விசாரணைக்கு வந்த வழக்குகளின் எண்ணிக்கை 9643 ஆகும். ஆனால், அவற்றில் வெறும் 955 வழக்குகளில் மட்டுமே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மொத்த வழக்குகளில், 9.90% வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதிலும் கூட 202 வழக்குகளில், அதாவது 21.10% வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். 2022-23ஆம் ஆண்டிலும் அதே நிலை தான் தொடர்ந்திருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட ஆண்டில் தொடரப்பட்ட வழக்கு, அதன்பின் 3 அல்லது 4 ஆண்டுகள் கழித்து விசாரணைக்கு வரும் போது, அவ்வழக்கு தொடர்பான நுண்ணிய விவரங்களை குழந்தைகளால் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. அதைக் காரணம் காட்டியே பாலியல் குற்றவாளிகள் விடுவிக்கச் செய்யப்படுகின்றனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டுமானால், குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அதை மனதில் கொண்டு போக்சோ வழக்குகளில் விசாரணை தாமதமாவதற்கு காரணங்கள் என்ன? குற்றவாளிகள் அதிக அளவில் விடுதலை செய்யப்படுவதற்கு காரணம் என்ன? என்பதைக் கண்டறிந்து அவற்றைக் களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவது அதிகரிப்பு; காரணங்களை அரசு கண்டறிய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,CHENNAI ,BMC ,President ,Tamil Nadu ,POCSO ,Dinakaran ,
× RELATED முல்லை பெரியாறு அணை தொடர்பான கூட்டம் ரத்து: அன்புமணி ராமதாஸ் வரவேற்பு