தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்: புயல் கரையை கடக்கும் போது மக்கள் பேருந்து பயணத்தை முற்றிலும் தவிருங்கள்.. அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள்..!!

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவித்துள்ளார். மாண்டஸ் புயல் இன்றிரவு முதல் அதிகாலைக்குள் மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.  சென்னையில் பலத்த மழை பெய்து வந்த நிலையில் தற்போது மழை நின்று காற்று மட்டும் வீசி வருகிறது.  சென்னை பட்டினம்பாக்கம், அடையாறு, திருவான்மியூர், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதனிடையே, புயல் காரணமாக இன்றிரவு அரசுப் பேருந்துகள் இயக்கப்படாது என தகவல் வெளியான நிலையில் போக்குவரத்து அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரத்தில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும். பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் தங்கள் பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாண்டஸ் புயல் கரையை கடக்கும் 2 மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது. மேலும், அந்தந்த மாவட்ட எல்லைகளுக்கு உட்பட்ட போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்கள், உயர் அலுவலர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் தொடர்பில் இருந்து, பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்கின்ற வகையில், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, கண்காணித்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புயல் கரையை கடக்கும் போது மக்கள் பேருந்து பயணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  சென்னை மெரீனாவுக்கு மக்கள் வருவதைக் தடுக்கும் வகையில் கலங்கரை விளக்கம் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் எச்சரிக்கையால் கடலூரில் வலுவிழந்த மரங்கள், மரக்கிளைகளை வெட்டும் பணி தீவிரமடைந்துள்ளது. கடல் நீர் கிராமத்தில் புகுந்ததால் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Related Stories: