×

ஆகமங்களை கண்டறிவது தொடர்பான கேள்விகள் அடங்கிய அறநிலைய துறை ஆணையரின் சுற்றறிக்கைக்கு ஐகோர்ட் தடை

சென்னை: கோயில்களின் ஆகமங்களை கண்டறிவது தொடர்பாக 50 கேள்விகளுடன் இந்து சமய அறநிலையத்துறையால் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 தமிழகத்தில் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் விதிகளை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகம விதிப்படி அர்ச்சர்களை நியமிக்க வேண்டும் என்பதால், எந்தெந்த கோவில்கள் எந்தெந்த ஆகமங்களை பின்பற்றுகின்றன என்பதை அடையாளம் காண  உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழுவை நியமித்து உத்தரவிட்டது.

இக்குழுவில், குழு தலைவர் ஒப்புதலுடன்  இரு உறுப்பினர்களை அரசு நியமிக்கவும் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், கோயில்களின் ஆகமங்களை அடையாளம் காண, அறநிலையத் துறை உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் சத்தியவேல் முருகன் தயாரித்த 50 கேள்விகளுக்கு விடையளிக்கும்படி அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத் துறை ஆணையர் நவம்பர் 4ம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டார். இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், கோயில்களின் ஆகமத்தை கண்டறிய உயர் நீதிமன்றம் நியமித்த குழுவின் அதிகாரத்தை பறித்துக் கொள்ளும் வகையில், சம்பந்தமில்லாத கேள்விகளுடன் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி இரு பிரதிநிதிகளை நியமிக்காத அரசு, அறநிலையத் துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு தலைவருக்கு அதிக அதிகாரம் வழங்கியுள்ளது நீதிமன்ற அவமதிப்பாகும். ஆகமங்கள் பற்றி எதுவும் தெரியாத சத்தியவேல் முருகன், நடைமுறையில் இல்லாத தமிழ் ஆகமம் பற்றி தவறான பரப்புரை மேற்கொண்டு வருகிறார். எனவே, ஆகமங்களை அறியாத அவர் தயாரித்த கேள்விகளுடன் கூடிய சுற்றறிக்கையை ரத்து செய்வதுடன், அவரை உயர் நீதிமன்றம் நியமித்த குழுவில் உறுப்பினராக நியமிக்கவும் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படாத நிலையில், குறிப்பிட்ட நபரை நியமிக்க கூடாது என முன்கூட்டியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 4ம் தேதி  சுற்றறிக்கை வேறு பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குறிப்பிட்ட அந்த சுற்றறிக்கை ஆகம விவரங்களை கோரும் வகையில் உள்ளதாக கூறி ஆகமங்களை கண்டறிவது தொடர்பாக 50 கேள்விகள் எழுப்பி அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.

Tags : ICourt ,Charity Commissioner , ICourt stay on circular of Charity Commissioner containing questions related to discovery of assets
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு