×

பல்கலை செனட் உறுப்பினர்கள் பதவி நீக்கம்; கவர்னரின் நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமாக உள்ளது: கேரள உயர்நீதிமன்றம் கண்டனம்

திருவனந்தபுரம்: பல்கலைக்கழக சென்ட் உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்த கேரள கவர்னரின் நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது என்று கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கேரளாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் மற்றும் பேராசிரியர் நியமனம் உள்பட பல்வேறு விவகாரங்களில் கேரள அரசுக்கும், மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே சமீபகாலமாக பனிப்போர் நிலவி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள பல்கலைக்கழகத்தில் புதிய துணைவேந்தரை நியமிப்பது தொடர்பாக நடந்த கூட்டத்தில் 15 செனட் உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து அவர்கள் அனைவரையும் பதவியிலிருந்து கவர்னர் டிஸ்மிஸ் செய்தார்.

இதை எதிர்த்து செனட் உறுப்பினர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது செனட் உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்தது மற்றும் இது தொடர்பாக கவர்னர் எழுதிய கடிதங்களை உயர்நீதிமன்றம் ஆய்வு செய்தது. இதன்பின் நீதிபதி தேவன் ராமச்சந்திரன் கூறுகையில், ‘வேந்தர் பதவியில் உள்ள கவர்னர் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் செனட் உறுப்பினர்களின் பதவியை ரத்து செய்யக்கூடாது. இந்த விவகாரத்தில் வேந்தரின் நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. வேந்தரின் நடவடிக்கைகள் அனைத்தும் சட்டபூர்வமாக இருக்க வேண்டும். இரு தரப்பும் விட்டுக் கொடுத்தால் மட்டுமே கேரள பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்னைகள் முடிவுக்கு வரும்’ என்று தெரிவித்தனர்.


Tags : University Senate ,Governor ,Kerala High Court , Dismissal of University Senate Members; Governor's action is childish: Kerala High Court condemns
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...