திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: அரோகரா’ முழக்கம் விண்ணை பிளக்க 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பிரசித்திபெற்ற மகாதீப பெருவிழாவையொட்டி இன்று அதிகாலை கோயில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது. மகாதீபத்தை தரிசிக்க திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம். அக்னி ஸ்தலம் என உலகமெங்கும் உள்ள பக்தர்களிடையே புகழ்பெற்று விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரசித்திபெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு தீப விழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் காலையிலும் இரவிலும் பஞ்சமூர்த்திகள் மாடவீதிகளில் பவனி வந்தனர். முக்கிய நிகழ்வுகளான வெள்ளித்தேரோட்டம் கடந்த 2-ம் தேதியும், மகா தேரோட்டம் 3-ம் தேதியும் விமர்சியாக நடந்தது. இதைத்தொடர்ந்து தீபத்திருவிழா உற்சவத்தின் 10ம் நாளான இன்று, மகாதீப பெருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது.

கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபத்திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லாத நிலை இருந்தது. எனவே, இந்த ஆண்டு கூடுதல் உற்சாகத்துடன் தீபத்திருவிழா நடந்து வருகிறது. இதனால் மகாதீபத்தை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் அண்ணாமலையார் கோயில் கருவறை முன்பு இன்று அதிகாலை 4 மணிக்கு, பரணி தீபம் ஏற்றப்பட்டது. ‘ஏகன் அநேகன்’ எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த தீபம் ஏற்றப்பட்டது. அப்போது வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் பரணி தீபத்தை ஏற்றினர். அப்போது கோயில் முழுவதும் விடிய விடிய காத்திருந்த பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி முழக்கமிட்டு பரணி தீபத்தை தரிசனம் செய்தனர். முன்னதாக பரணி தீபத்தையொட்டி கோயிலுக்குள் அதிகாலை 2 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

கோயில் வளாகத்திற்குள் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பரணி தீபத்தைக்காண ஏற்கனவே டிக்கெட் பெற்றிருந்த பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ், ஐகோர்ட் நீதிபதி மகாதேவன், ஏடிஜிபி சங்கர், வடக்கு மண்டல ஐஜி கண்ணன், எஸ்பி கார்த்திகேயன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ‘மகா தீபம்’ இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது. முன்னதாக அண்ணாமலையார் கோயில் 3-ம் பிரகாரத்தில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் மாலை 5 மணியளவில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 5.59 மணிக்கு கோயில் கொடிமரம் முன்பு ஆனந்த தாண்டவத்துடன் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சியளித்தார். அப்போது, கொடிமரம் முன்பு அகண்டத்தில் தீபம் ஏற்றியதும், சரியாக மாலை 6 மணிக்கு கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் அண்ணாமலையாரின் ஜோதி வடிவமான ‘மகா தீபம்’ ஏற்றப்பட்டது.

மகாதீபம் ஏற்றுவதற்காக 4,500 கிலோ தூய்மையான நெய், 1,150 மீட்டர் திரி (காடா துணி), 20 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. மகா தீபம் ஏற்றுவதற்கான புதிய கொப்பரை மலை உச்சிக்கு நேற்று கொண்டு சேர்க்கப்பட்டது. முன்னதாக அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீப கொப்பரையை திருப்பணி ஊழியர்கள் தோளில் சுமந்தபடி மலை உச்சிக்கு கொண்டுசென்று சேர்த்தனர். மலை மீது சிறப்பு பூஜைகளுடன் தீப கொப்பரை நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மகாதீப கொப்பரை ஐந்தரை அடி உயரமும், 200 கிலோ எடை கொண்டதாகும்.

Related Stories: