×

அம்பேத்கர் நினைவு நாள்; இந்திய ஒருமைப்பாட்டை அரசமைப்பு சட்டத்தின் வழி உறுதிப்படுத்தியவர்: திருமாவளவன் புகழஞ்சலி

சென்னை: இந்திய ஒருமைப்பாட்டை அரசமைப்பு சட்டத்தின் வழி உறுதிப்படுத்தியவர் அம்பேத்கர் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:  புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில், புதிய இந்தியாவை கட்டமைத்திட ஆற்றியுள்ள அவரது அளப்பரிய பங்களிப்பை நினைவு கூர்ந்து அவருக்கு விசிக சார்பில் எமது வீரவணக்கத்தை செலுத்துகிறோம். அத்துடன், சனாதன சங்பரிவார்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் இதே நாளாகும். ஆகவே தான் ஆண்டு தோறும் இந்த நாளை தலித் மற்றும் இஸ்லாமியர் எழுச்சி நாளாக கடைபிடித்து வருகிறோம்.

சிறுபான்மையினரின் சனநாயக உரிமைகளை பாதுகாப்பதன் மூலமே இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாத்திட இயலும் என்பதை அரசமைப்புச் சட்டத்தின் வழி உறுதிப்படுத்தியவர் அம்பேத்கர். அத்தகைய போற்றுதலுக்குரிய சனநாயக வெறுப்பு அரசியலுக்கு எதிரான - சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்கான உறுதி மொழியை விசிக ஏற்கிறது. அதாவது, அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே அம்பேத்கர் சிலைகளுக்கு அல்லது அவரது உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மலர்த்தூவி வீரவணக்கம் செலுத்துவதுடன், சமூக நல்லிணக்கத்திற்கான உறுதிமொழியையும் ஏற்றிட வேண்டும்.

பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார்கள் ஒருபுறம் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தும் நாடக அரசியலை செய்து வருகின்றனர். அதேவேலையில், இன்னொருபுறம் அவரது சமத்துவ கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை அழித்தொழிப்பதிலே குறியாக உள்ளனர். அதனை உணரத் தவறினால் நாம் வரலாற்று தவறினை செய்தவர்களாவோம். அத்துடன், இதே நாளில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும் அதன்மூலம் இசுலாமியர், கிறித்தவர் உள்ளிட்ட சிறுபான்மையினரின் சனநாயக உரிமைகள் மற்றும் சமூக நல்லிணக்கம் தகர்க்கப்பட்டதையும் கவலையுடன் நினைவு கூர்ந்திடுவோம்.

மேலும், சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் தொடரும் வெறுப்பு அரசியலை முறியடிக்கவும், இந்துக்கள், முஸ்லீம்கள், கிறித்தவர்கள் போன்ற அனைத்து தரப்பு மக்களிடையே சகோதரத்துவத்தை வளர்த்தெடுக்கவும் தலித், இஸ்லாமிய எழுச்சி நாளான இந்நாளில் உறுதியேற்போம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Tags : Ambedkar Memorial Day ,India ,Thirumavalavan Pugajanjali , Ambedkar Memorial Day; The Constitution of India confirmed the unity of India by: Thirumavalavan Pugajanjali
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!