பாலமேடு அருகே சாத்தையாறு அணையில் ஷட்டர் பழுதால் வீணாக வெளியேறும் தண்ணீர்

*நீர்மட்டம் குறைவதால் விவசாயிகள் கவலை

அலங்காநல்லூர் : பாலமேடு அருகே சாத்தையாறு அணையில், ஷட்டர் பழுதால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. நீர்மட்டம் குறைவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நீர்க்கசிவை தடுத்து அணைப் பகுதிகளில் தேங்கியுள்ள வண்டல் மண் படிவுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம், பாலமேடு அருகே, 29 அடி உயரமுள்ள சாத்தையாறு அணை உள்ளது. இங்கு தேக்கப்படும் தண்ணீர் பாசனம் மற்றும் குடிநீர் வசதிக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆக்கிரமிப்பால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் குறைந்துள்ளன. அணையில் 10 அடிக்கு மேல் மணல், வண்டல் மண் படிவுகள் தேங்கியுள்ளன.

கடந்த 2019ல் அதிமுக ஆட்சி காலத்தில் அணை பராமரிப்பு மற்றும் ஷட்டர் பழுது பார்க்க ரூ.44 லட்சம் பொதுப்பணித்துறை மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அணையின் முக்கிய பழமையான ஷட்டரை மாற்றி புதிதாக அமைப்பதற்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அணையின் ஷட்டர் மின்மோட்டார் அதனை இயக்கக்கூடிய இணைப்புச் சங்கிலி ஆகியவற்றை முறையாக பழுது நீக்கி, பராமரிக்காததால், அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் போதெல்லாம் ஷட்டரை திறக்க முடியாமல், அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் சாத்தையாறு அணை 5 முறை தனது கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்தது. இதனால், 10க்கும் மேற்பட்ட கண்மாய், குளங்கள், ஊருணிகள் நிரம்பின. இன்று வரை அணைக்கு நீர்வரத்து உள்ளது. ஆனால், ஷட்டர் பழுது காரணமாக அணையிலிருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.இதனால், அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. தண்ணீர் வீணாக வெளியேறி வருவதால், அணையில் தண்ணீர் இருப்பதை கருத்தில் கொண்டு, விவசாயப் பணிகளை மேற்கொண்டுள்ள விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

இது குறித்து சாத்தையாறு அணை பாசன விவசாயிகள் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 முறை சாத்தையாறு அணை நிரம்பி மறுகால் பாய்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சாத்தையாறு அணையில் தண்ணீர் வற்றாமல், 20 அடிக்கும் குறையாமல் உள்ளது. இந்த நிலையில் ஷட்டர்களில் ஏற்பட்ட பழுதை நீக்க வலியுறுத்தி, பலமுறை பொதுப்பணித்துறைக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

அதிமுக ஆட்சியில் அலட்சியம்: கடந்த 2018ல் சாத்தையாறு அணை முழுவதுமாக நிரம்பி தண்ணீர் வெளியேறிய சமயத்தில், ஷட்டரில் பெரிய பழுது ஏற்பட்ட நிலையில், அப்போதைய அதிமுக ஆட்சியில் நீர்க்கசிவை நிறுத்துவதற்கு வைக்கோலை கொண்டு அடைத்தனர். அரசு ஒதுக்கிய நிதி மூலம் ஷட்டரின் கீழ்புறத்தில் ராட்சத ரப்பர் புஸ்கள் வைக்கப்பட்டு இருந்தால் அணையில் இருந்து வெளியேறக்கூடிய கசிவு முழுவதுமாக நிறுத்தப்பட்டு இருக்கும்.

ஆனால், பழைய ஷட்டருக்கு பெயிண்ட் அடித்து ஏமாற்றினர். கோடை காலத்தில் அணையில் இருக்கும் நீரை முற்றிலுமாக வெளியேற்றிவிட்டு அணைப் பகுதியில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றி, 29 அடி தண்ணீர் தேக்கி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனை பொதுப்பணித்துறை தமிழக அரசிற்கு திட்ட அறிக்கையாக தர வேண்டும்’ என்றானர்.

நீர் மேலாண்மை வல்லுநர்கள் சிலர் கூறுகையில், ‘இதைவிட பெரிய நீர்க்கசிவுகள் எல்லாம் பொதுப்பணித்துறை மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த அணையிலிருந்து ஷட்டர்கள் மூலம் வெளியேறும் தண்ணீரை நிறுத்துவதற்கு கடலில் மூழ்கி முத்தெடுக்கும் மீனவர்கள் மூலம் ஆக்ஸிஜன் சிலிண்டர் உடன் கூடிய பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு, இந்த ஷட்டரில் இருந்து வெளியேறும் தண்ணீரை முழுமையாக நிறுத்தலாம். திருநெல்வேலி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு கடல்சார் பகுதிகளில், கை தேர்ந்த நபர்கள் உள்ளனர். எனவே, ஷட்டரில் நீர்க்கசிவை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: