2,668 அடி உயர மலை மீது கொப்பரை கொண்டு செல்லப்பட்டது அண்ணாமலையாரின் ‘மகா தீபம்’ இன்று மாலை ஏற்றப்படுகிறது: தரிசனத்துக்கு திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள்; திருவண்ணாமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற மகாதீப பெருவிழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. அதையொட்டி, மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10ம் நாளான இன்று, மகாதீப பெருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபத்திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லாத நிலை இருந்தது. எனவே, இந்த ஆண்டு கூடுதல் உற்சாகத்துடன் தீபத்திருவிழா நடக்கிறது.

எனவே, மகாதீபத்தை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டுள்ளனர். இந்நிலையில், அண்ணாமலையார் திருக்கோயில் கருவறை முன்பு இன்று அதிகாலை 4 மணிக்கு, ‘ஏகன் அநேகன்’ எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில் பரணி தீபம் ஏற்றப்படும். அதையொட்டி, கோயிலுக்குள் பக்தர்கள் இன்று அதிகாலை 2 மணி முதல் அனுமதிக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து, இன்று மாலை மகாதீப பெருவிழா நடைபெற உள்ளது. அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் மாலை 5 மணியளவில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல் நடைபெறும். மாலை 5.55 மணிக்கு, கோயில் கொடிமரம் முன்பு ஆனந்த தாண்டவத்துடன் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சியளிப்பார். அப்போது, கொடிமரம் முன்பு அகண்டத்தில் தீபம் ஏற்றியதும், மிகச்சரியாக மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் அண்ணாமலையாரின் ஜோதி வடிவமான ‘மகா தீபம்’ ஏற்றப்படும். தீபம் ஏற்றுவதற்காக 4,500 கிலோ தூய நெய், 1,150 மீட்டர் திரி (காடா துணி), 20 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது.

மகா தீபத்தை முன்னிட்டு, தீபம் ஏற்றுவதற்கான புதிய கொப்பரை, மலை உச்சிக்கு நேற்று காலை கொண்டு சேர்க்கப்பட்டது. அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீப கொப்பரையை திருப்பணி ஊழியர்கள் தோளில் சுமந்தபடி மலை உச்சிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். மலை மீது சிறப்பு பூஜைகளுடன் தீப கொப்பரை நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மகாதீப கொப்பரை ஐந்தரை அடி உயரமும், 200 கிலோ எடை கொண்டதாகும். 2,500 பக்தர்களுக்கு மட்டும் புகைப்படத்துடன் கூடிய அனுமதி அட்டை வழங்கப்படுகிறது. . இன்று காலை 6 மணி முதல் அனுமதி அட்டை வழங்கப்படும்.

அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் மகாதீப விழாவை தரிசிக்க, இன்று மதியம் 2 மணியில் இருந்து கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தீபத்தை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக, 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்று முதல் வரும் 8ம் தேதி வரை 63 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. நகரையொட்டி, 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கார், வேன் போன்றவை நிறுத்த 59 இடங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு, ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில், 5 டிஐஜிக்கள், 32 எஸ்பிக்கள் உள்பட 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

* நாளை பவுர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலையில் கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை(7ம் தேதி) காலை 8.14 மணிக்கு தொடங்கி, நாளை மறுதினம் (8ம் தேதி) காலை 9.22 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, மகாதீபத்திருவிழா முடிந்த பிறகும், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, சிறப்பு பஸ்கள் இயக்கம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து நாளையும் நீட்டிக்கப்பட்டுள்ளன. இன்று மாலை மலை மீது ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

* 3 நாட்களுக்கு தெப்பல் உற்சவம்

தீபத்திருவிழாவின் தொடக்கமாக 3 நாட்கள் எல்லை காவல் தெய்வ வழிபாடு நடைபெற்றதை போல, விழாவின் நிறைவாக மூன்று நாட்கள் ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறுவது தீபத்திருவிழாவின் சிறப்பாகும். அதன்படி, தீபத்திருவிழாவின் நிறைவாக நாளை முதல் வரும் 9ம் தேதி வரை, ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறும். அதையொட்டி, முதல் நாளன்று இரவு 9 மணி அளவில் சந்திரசேகரர் தெப்பலில் பவனி வந்து அருள்பாலிக்கிறார்.

அதைத்தொடர்ந்து, நாளை மறுதினம் (8ம் தேதி) இரவு 9 மணி அளவில், ஐயங்குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பல் பவனியும், வரும் 9ம் தேதி தேதி இரவு சுப்பிரமணியர் தெப்பல் பவனியும் நடைபெறும். 2 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பல் உற்சவம் ஐயங்குளத்தில் நடைபெறுவதால், தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: