கும்மிடிப்பூண்டி அருகே டேங்கர் லாரி-ஆம்னி பேருந்து மோதல்; 4 பேர் பலி

சென்னை: சென்னை அடுத்த கவரப்பேட்டை அருகே, நேற்று அதிகாலையில் டேங்கர் லாரியும், ஆம்னி பேருந்தும் பயங்கரமாக மோதி கொண்டது. இதில், 4 பேர் பரிதாபமாக இறந்தனர். 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் கூட்டுச்சாலை பகுதியில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்நிலையில், கடந்த  2 நாட்களாக பனி மூட்டம் அதிகமாக இருப்பதால், எதிரில் வரும் வாகனம், சாலைகள் மற்றும் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை கூட காண முடியாமல் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார்  5.30 மணியளவில், ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி, காலியாக உள்ள கெமிக்கல் டேங்கர் லாரி ஒன்று வந்தது.  இதை சுப்பாராவ் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

இதேப்போன்று, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி தனியார்  சொகுசு பேருந்து அதிவேகமாக வந்தது. ஆம்னி பஸ்சை பெங்களுரை சேர்ந்த கிஷோர் ஓட்டி வந்தார்.   இதில், 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில், தச்சூர் கூட்டுச்சாலை மேம்பாலம் பகுதியில் இந்த கெமிக்கல் லாரி- ஆம்னி பஸ் அசுர வேகத்தில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதனால், 2 டிரைவர்களும் ஒருவரை ஒருவர் முந்தி செல்லும் வகையில் மிகவும் நெருக்கமாகவும் வேகமாகவும் ஓட்டிச் செல்ல முயன்றனர். இந்நிலையில்,  தச்சூர் பகுதியில் டேங்கர் லாரியின் பின்பக்க டயர் திடீரென வெடித்துள்ளது.

இதில், நிலை தடுமாறிய டேங்கர் லாரி மீது, பின்னால் வந்த தனியார்  சொகுசு பேருந்து வேகத்தை கட்டுப்படுத்த பயங்கரமாக மோதியது. இதில், இரண்டு வாகனங்களும் நொறுங்கின. இதில் பஸ்சின் முன் பகுதியும், லாரியின் பின் பகுதியும் அப்பளம் போல நொறுங்கியது. நன்றாக தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் பயங்கர சத்தம் காரணமாக அலறினர். இதில், பலர் இடிபாடுகளில் சிக்கி பஸ்சில் இருந்து வெளியே வர முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள்  உடனே கவரப்பேட்டை போலீசார், பொன்னேரி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள், இடிபாடுகளில் சிக்கிகொண்ட பயணிகளை மீட்டு,  சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில், ஆம்னி பேருந்தில் இருந்த  நெல்லூரை சேர்ந்த   சதீஷ் குமார் (27), பெங்களூரைச் சேர்ந்த ரோகித் பிரசாத்(25), ஹைதராபாத்தை சேர்ந்த பஸ் கிளீனர் தர்(22)ஆகிய மூன்று பேர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்,  நான்கு பேர் காயமடைந்தனர்.

போலீசார் பலியானவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வந்த தண்டலச்சேரி கிராமத்தை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் ஜானகிராமன்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து காரணமாக, சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு  ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மேம்பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தி, அவ்வழியாக சென்ற எல்லா வாகனங்களையும் சர்வீஸ் சாலை வழியாக திருப்பி அனுப்பினர். இதுகுறித்து  போலீசார்  வழக்கு பதிவு செய்து பேருந்து மற்றும் லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால், சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

Related Stories: