93 தொகுதிகளில் இறுதிகட்ட தேர்தல்; குஜராத்தில் 60 சதவீத வாக்குப்பதிவு: பிரதமர் மோடி, அமித்ஷா வரிசையில் நின்று வாக்களிப்பு

அகமதாபாத்: குஜராத்தில் இறுதிகட்ட தேர்தல் நடந்த 93 தொகுதிகளில் 60 சதவீத வாக்குப்பதிவு நடந்தது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் பூபேந்திரபட்டேல் ஆகியோர் வரிசையில் நின்று வாக்களித்தனர். நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள குஜராத் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அங்குள்ள 182 சட்டசபை தொகுதிகளில் முதற்கட்டமாக 89 இடங்களுக்கு கடந்த 1ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. முதல்கட்ட தேர்தலில் 63.30 சதவீத வாக்குகள் பதிவானது. 2வது மற்றும் இறுதிக்கட்டமாக 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. முதல்வர் பூபேந்திர பட்டேல், 285 சுயேட்சைகள் உள்பட 832 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

தேர்தல் நடந்த 93 தொகுதிகளில் பா.ஜ, ஆம்ஆத்மி தலா 93 தொகுதிகளிலும், காங்கிரஸ் 90  தொகுதிகளிலும், கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 2 தொகுதிகளிலும்,  பாரதீய பழங்குடியின கட்சி 12 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 44  தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. 14,975 பூத்களில் மக்கள் வரிசையாக நின்று ஓட்டு போட்டனர். அகமதாபாத்தில் உள்ள ராணிப் பகுதியில் உள் நிஸ்ஹான் உயர்நிலைபள்ளியில் பிரதமர் மோடி ஓட்டு போட்டார். காந்திநகர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அவரது தாயார் ஹிராபாய் ஓட்டு போட்டார்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது குடும்பத்துடன் அகமதாபாத் நாரண்புராவில் உள்ள மாநகராட்சி மையத்தில் ஓட்டு போட்டார். ஆம்ஆத்மி முதல்வர் வேட்பாளர் இசுதான் காட்வி அங்குள்ள குமா பகுதியில் ஓட்டு போட்டார். இதே போல் முதல்வர் பூபேந்திர பட்டேல், பா.ஜ தலைவர்கள் ஹர்திக் பட்டேல், அல்பேஷ் தாக்கூர், காங்கிரஸ் தலைவர் ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஓட்டு போட்டனர்.  மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தது. அங்கு 60 சதவீத வாக்குகள் மொத்தம் பதிவாகி இருந்தன. குஜராத் மற்றும் இமாச்சலபிரதேசத்தில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்படுகின்றன. அன்று  பிற்பகல் இரு மாநிலங்களிலும் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற விவரம் தெரிந்து விடும்.

Related Stories: