×

பாகிஸ்தானுடன் முதல் டெஸ்ட்; 74 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி: ஆண்டர்சன், ராபின்சன் அசத்தல்

ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணியுடன் நடந்த முதல் டெஸ்டில், இங்கிலாந்து 74 ரன் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 657 ரன் குவிக்க, பாகிஸ்தான் 579 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. 2வது இன்னிங்சில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 343 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான், 4ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 80 ரன் எடுத்திருந்தது.

இமாம் உல் ஹக் 43, ஷகீல் 24 ரன்னுடன் நேற்று பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். இமாம் 48 ரன் எடுத்து வெளியேற, ரிஸ்வான் 46, ஷகீல் 76 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அசார் அலி - ஆகா சல்மான் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 61 ரன் சேர்க்க, பாகிஸ்தான் வெற்றி நம்பிக்கையுடன் நிதான நடை போட்டது. 80.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்திருந்த பாகிஸ்தான், யாருமே எதிர்பார்க்காத வகையில் மேற்கொண்டு 9 ரன் மட்டுமே சேர்த்து, எஞ்சிய 5 விக்கெட்டையும் பறிகொடுத்து 74 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

அசார் அலி 40, ஆகா சல்மான் 30 ரன் எடுக்க, அடுத்து வந்த சாஹித் மகமூத் 1, ஹரிஸ் ராவுப் 0, நசீம் ஷா 6 ரன்னில் பெவிலியன் திரும்பினர். பாகிஸ்தான் 96.3 ஓவரில் 268 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து பந்துவீச்சில் ஆலிவர் ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன் தலா 4 விக்கெட், ஸ்டோக்ஸ், ஜாக் லீச் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். ஆலிவர் ராபின்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் முல்தானில் டிச.9ம் தேதி தொடங்குகிறது.

Tags : Pakistan ,England ,Anderson ,Robinson , First Test with Pakistan; England win by 74 runs: Anderson, Robinson fantastic
× RELATED சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்