×

ஸ்ரீரங்கம் கோயிலில் கைசிக ஏகாதசி விழா: நம்பெருமாள் மீது பச்சை கற்பூரம் தூவி பக்தர்கள் தரிசனம்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கைசிக ஏகாதசி விழா நேற்று தொடங்கி இன்று (5ம் தேதி) அதிகாலை வரை நடைபெற்றது. விழாவில் நேற்று உற்சவ நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு காலை 10.30 மணிக்கு சந்தன மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சந்தன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

2வது புறப்பாடாக நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு இரவு 9.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை 365 வஸ்திரங்களும், 365 தாம்பூலங்களும், அரையர் சேவையுடன் 365 கற்பூர ஆரத்தியும் சமர்பித்தனர். இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2 மணிவரை நம்பெருமாள் முன் கைசிக புராணம் எனப்படும் பக்தர் நம்பாடுவான் வரலாற்றை பக்தி சிரத்தையோடு பெருமாள் முன் பட்டர் படித்தார்.

பின்னர் அதிகாலை 5.15 மணிக்கு நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 2ம் பிரகாரத்தில் மேலப்படி வழியாக காலை 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை கண்டருளி காலை 6 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். அவ்வாறு நம்பெருமாள் படியேறியபோது பக்தர்கள் பச்சை கற்பூரப்பொடியை நம்பெருமாள் மீது தூவினர். இந்த கற்பூர படியேற்ற சேவையை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். கைசிக ஏகாதசியை முன்னிட்டு நேற்று இரவில் இருந்து விடிய, விடிய பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.


Tags : Kishika Ekadasi Festival ,Sriranangam Temple ,Namberumal , Kaisika Ekadasi Festival at Srirangam Temple: Devotees sprinkle green camphor on Namperumal and have darshan
× RELATED திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில்...