×

சிவகாசி மாநகராட்சியில் பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு; ஆணையாளர் தகவல்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் நேரிடையாக பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படுகிறது. இதன்படி 155 சொத்து தீர்வை, 447 பெயர் மாற்றம் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் இணைத்து சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. திருத்தங்கல், சிவகாசியில் தலா 24 வார்டுகள் என மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியில் சொத்து வரி வசூல் மறு சீரமைப்பு பணியால் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. தற்ேபாது இந்த பணிகள் முடிவடைந்து வரி வசூல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சி பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்ட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

நூற்றாண்டு நிதியாக ரூ.49.2 கோடி மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் நடடிவடிக்கை மேற்கொண்டுள்ளது.
திருத்தங்கல் பறையங்குளம் கண்மாய் சீரமைப்பிற்காக ரூ.1.40 லட்சம், முத்தாலம்மன் குளத்தை சீரமைக்க ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர நமக்கு நாமே திட்டத்தில் ரூ.1.42 கோடி மதிப்பில் அடிப்படை பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு ெசய்யப்பட்டுள்ளது. இதேபோன்று சிவகாசி பொத்துமரத்து ஊருணி ரூ.2 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி துவங்கப்பட்டது. சிவகாசி பேருந்து நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்பில் வணிக வளாகம், ரூ.10 கோடி மதிப்பில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மின்சார பயன்பாட்டை குறைக்கும் வகையில் தமிழக அரசு அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் பேரூராட்சிகள், ஊராட்சிகளில் பயன்படுத்தப்படும் தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்ற அறிவுறுத்தியது. அதன்படி சிவகாசி மாநகராட்சியில் உள்ள 4,440 தெரு விளக்குகளில் எல்இடி விளக்குகள் பொருத்த ரூ.5.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஹாலோஜன் விளக்குகள் உள்ள இடங்களில் 15 வாட்ஸ் விளக்குகளும், டியூப் லைட் உள்ள இடங்களில் 30 வாட்ஸ் எல்இடி விளக்குகளும் பொருத்தப்பட உள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது எல்இடி லைட் ெபாருத்தும் பணிக்காக ரூ.5.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியில் கொடுக்கப்படும் மனுக்களுக்கு பணம் பெற்று கொண்டு தீர்வு காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுவதாக புகார் கூறப்பட்டது.

சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் ஒருவர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பணத்துடன் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி உடனடியாக மாநகராட்சி பணியாளர்களை அழைத்து ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை சொத்து தீர்வைக்கு 187 மனு வந்துள்ளது. இதில் 155 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெயர் மாற்றத்திற்கு வந்த 627 மனுக்களில் 447 மனுக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே சொத்து தீர்வைக்கு 30 நாட்களுக்குள்ளும், பெயர் மாற்றத்திற்கு 15 நாட்களுக்குள்ளும் தீர்வு காண வேண்டும்.

ஆனால் சரியான ஆவணங்களுடன் பொதுமக்கள் நேரடியாக வழங்கிய மனுக்களுக்குள் உடனடி தீர்வு காணப்பட்டு சொத்து தீர்வை மற்றும் பெயர் மாற்றம் செய்து தரப்பட்டுள்ளது.
மேலும் புதிய குடிநீர் இணைப்பு, பிளான் அப்ரூவல், காலி மனை தீர்வை, பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உரிய ஆவணங்கள் இல்லாத மனுக்கள் மட்டுமே காத்திருப்பில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த மனுக்கள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் போனில் தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களை கொண்டு வர வலியுறுத்தப்படுகிறது. அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகின்றது. கூடுதலாக அதிகாரிகள் பணம் கேட்பதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : Sivakasi Corporation , Immediate resolution of public grievances in Sivakasi Corporation; Commissioner Information
× RELATED சிவகாசி மாநகராட்சி மக்கள் வரவேற்பு;...