திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் பக்தர்கள் வெள்ளத்தில் மகா ரதம் பவனி: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் ‘மகாரதம்’ மாட வீதியில் பவனி வந்தது. நள்ளிரவு வரை வலம் வந்த பஞ்ச ரதங்களை, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 7ம் நாளான நேற்று, தேர் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் நேற்று அதிகாலை அலங்கார ரூபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர்.

அப்போது, சங்கொலி, மேளதாளம் முழங்க தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, மாட வீதியில் அலங்கரித்து நிலை நிறுத்தியிருந்த ஐந்து தேர்களில், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிறப்பு பூஜைகளுடன் விநாயகர் தேர் புறப்பாடு காலை 6.40 மணிக்கு நடந்தது. அதனை தொடர்ந்து சுப்பிரமணியர் தேர் புறப்பாடு நடந்தது. அதில், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் அலங்கார ரூபத்தில் அருள்பாலித்தார்.  சுப்பிரமணியர் தேர் இந்தாண்டு ரூ.30 லட்சத்தில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னர் ‘மகா ரதம்’ மாலை 3.35 மணிக்கு பவனி தொடங்கியது. அப்போது, அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ என பக்தி பரவசத்துடன் விண்ணதிர முழக்கமிட்டபடி வடம் பிடித்து தேரை இழுத்தனர். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பா.முருகேஷ், எஸ்பி கார்த்திகேயன் உள்ளிட்டோர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தியபடி, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரின் மகாரதம் பவனி வந்தது.

அப்போது, மேளதாளம் முழங்க, மங்கள இசை ஒலிக்க, தூப தீபாராதனையுடன் மகா ரதத்தின் மீது மலர்களை தூவி பக்தர்கள் வணங்கினர். இரவு 11 மணியளவில் நிலையை அடைந்தது. அதைத்தொடர்ந்து, அம்மன் தேர் பவனி புறப்பாடு நடந்தது. பெண்கள் மட்டுமே அம்மன் தேர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். நிறைவாக, சண்டிகேஸ்வரர் தேர் மாட வீதியில் பவனி வந்தது. தேரோட்டத்தை தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டிருந்தனர். அதனால், காணும் திசையெங்கும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது.

* கரும்புத் தொட்டில் நேர்த்திக்கடன்

தீபத்திருவிழாவின் 7ம் நாளான நேற்று நடந்த தேரோட்டத்தில், நூற்றுக்கணக்கான தம்பதியர், தங்கள் குழந்தைகளை கரும்புத் தொட்டிலில் சுமந்து, கோயில் 3ம் பிரகாரம் மற்றும் மாட வீதியில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், தொட்டிலாக பயன்படுத்திய கரும்பை, அண்ணாமலையார் கோயிலில் காணிக்கையாக வழங்கினர்.

Related Stories: