பிஷப் தலைமையில் சிறப்பு திருப்பலி கோட்டாறு சவேரியார் பேராலயத்தில் இன்று 2வது நாள் தேர் பவனி: போக்குவரத்து மாற்றம் அமல்

நாகர்கோவில்:  நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலய 9ம் திருவிழாவையொட்டி இன்று இரவு தேர் பவனி நடக்கிறது. மாலையில் பிஷப் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டாறு  புனித சவேரியார் பேராலயத்தின் 10 நாள் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெற்று வருகிறது. நேற்று (1ம் தேதி) 8ம் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை  ஆடம்பரக்கூட்டு திருப்பலி முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில்  நடந்தது. பின்னர் இரவு தேர்பவனி நடந்தது. சவேரியார் ஒரு தேரிலும், மிக்கேல்  ஆண்டவர் ஒரு தேரிலும் வலம் வந்தனர். தேரோட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து ெகாண்டனர். உப்பு, மெழுகுவர்த்தி கொடுத்து வழிபட்டனர். தேருக்கு பின்னால் கும்பிடு நமஸ்காரமும் செய்து நேர்ச்சையை  நிறைவேற்றினர்.

இன்று  (2ம் தேதி) 9ம் திருவிழா நடக்கிறது. காலை 5.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது. இன்று மாலை  6.30க்கு சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. இதில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொள்கிறார். இரவு 8.30 மணிக்கு சவேரியார், மாதா தேர் பவனி  நடக்கிறது. இன்று 9ம் திருவிழாவையொட்டி ஆலயத்தில் பக்தர்கள் குவிந்தனர். குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் வருவார்கள் என்பதால் டி.எஸ்.பி. நவீன்குமார் தலைமையில் பலத்த  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாளை (3ம்தேதி) 10ம் நாள் திருவிழா நடக்கிறது. இதையொட்டி சவேரியார், மாதா, மிக்கேல் ஆண்டவர், செபஸ்தியார்  ஆகிய நான்கு தேர்பவனி நடக்கிறது. நாளை குமரி மாவட்டத்திற்கு  உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. கோட்டார் சவேரியார் கோயில் திருவிழாவில்  கடைசி 3 நாட்களில் அதிகமாக பக்தர்கள், பொதுமக்கள் வருவது வழக்கம். இந்த  வருடம் 10ம் நாள் திருவிழா முடிந்து, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்றைய தினமும் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 9,10ம் திருவிழா மற்றும் ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து குறைந்த பட்சம் ச சுமார் 7 லட்சம் பேர்  வருவார்கள் என  கோயில் நிர்வாகத்தினர் எதிர்பார்த்துள்ளனர்.

போக்குவரத்து மாற்றம்:  சவேரியார் பேராலய திருவிழாவையொட்டி இன்று மதியம் 1  மணி முதல் நாளை  திருவிழா முடியும் வரை போக்குவரத்து மாற்றம்  செய்யப்படுகிறது. இதன்படி கன்னியாகுமரி, இருளப்பபுரம், ஈத்தாமொழியில்  இருந்து பீச்ரோடு வழியாக நாகர்கோவில் வரும் வாகனங்கள் பீச்ரோட்டில் இருந்து  ஆயுதப்படை மைதானம் ரோடு, பொன்னப்பநாடார் காலனி, கார்மல்பள்ளி,  ராமன்புதூர், செட்டிக்குளம் வழியாக செல்லவேண்டும். மேலும் வடசேரி,  கோர்ட்ரோடு மற்றும் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி,  அஞ்சுகிராமம், பறக்கை, இருளப்பபுரம் மற்றும் ஈத்தாமொழி மார்க்கமாக செல்லும்  வாகனங்கள் வேப்பமூடு ஜங்சன், பொதுப்பணித்துறை ரோடு வழியாக செட்டிகுளம்  ஜங்சன், இந்து கல்லூரிசாலை, பீச்ரோடு ஜங்சன் வழியாக செல்லவேண்டும் என  போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: