×

நாக் அவுட் சுற்றில் உள்ளே: அர்ஜென்டினா, போலந்து வெளியே: மெக்சிகோ, சவூதி அரேபியா

தோஹா: உலக கோப்பை சி பிரிவில் கடைசி லீக் ஆட்டங்களில்  மோதிய  அர்ஜென்டினா, போலந்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அரங்கம் 974ல் நேற்று நடந்த சி பிரிவு  கடைசி லீக் ஆட்டத்தில்  போலந்து, அர்ஜென்டினா அணிகள் களம் கண்டன. இந்த ஆட்டத்தில் வென்றால்தான் அடுத்தச் சுற்று வாய்ப்பு என்ற நிலையில் இரண்டு அணிகளும் மோதின.   அதிலும்  கோல் மன்னர்களான போலந்தின் கேப்டன் ரபோர்டோ லெவாண்டோவ்ஸ்கி,  அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஆகியோர் மோதுவதால் இரண்டு தரப்பிலும் கோல் மழை பெய்யும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மார்கழி பனியால் காணாமல் போன மழை போல் ஆகி விட்டது போலந்தின் ஆட்டம்.  அவர்கள் தட்டுதடுமாற,  ஆரம்பம் முதலே அர்ஜென்டினா வீரர்கள் எதிரணி கோல் பகுதியை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர்.  அந்த முயற்சிகளை போலந்தின் கோல்கீப்பர் ஷ்செஸ்னி அற்புதமாக தடுத்து ஆதிக்கம் செலுத்தினார். அதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.

ஆனால் 2வது பாதி தொடங்கிய சில விநாடிகளில் ஆட்டத்தின் 46வது நிமிடத்தில் தற்காப்பு ஆட்டக்காரர்  மொலினா தட்டித் தந்த பந்தை  நடுக்கள வீரர்  அலிஸ்டர் கோலாக மாற்றினார்.
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினாவின்  நடுகள வீரர்  பெர்னாண்டஸ் ஆட்டத்தின் 67வது நிமிடத்தில்  டிரிபிளிங் செய்து தந்த பந்தை  முன்கள வீரர் ஜூலியன்   கோலாக்கினார். அதனால் ஏற்பட்ட   முன்னிலை கடைசி வரை நீடிக்க, அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஏற்கனவே சவூதி அரேபியாவிடம் தோற்ற அர்ஜென்டினா, மெக்சிகோ, போலந்து அணிகளை வீழ்த்தி 6 புள்ளிகளுடன் சி பிரிவில் முதலிடம் பிடித்ததுடன் நாக் அவுட் சுற்றுக்கும் முன்னேறியது. மெக்சிகோ-சவுதி: தோற்ற போலந்து அணி,   சி பிரிவில் உள்ள  சவூதி  அரேபியா-மெக்சிகோ இடையிலான ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருந்தது.

அந்த 2 அணிகளும், வெற்றி அவசியம் என்ற நிலையில் லுசெயில் அரங்கில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் மோதின. பாதிக்கும் மேற்பட்ட நேரம் பந்தை தன் வசம் வைத்திருந்த மெக்சிகோ பல முறை கோலடிக்க  செய்த முயற்சிகள் முதல் பாதியில் எடுபடவில்லை. ஆனால் 2வது பாதியில் ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் மாண்ட்ஸ் தட்டித் தந்த பந்தை  ஹென்றி ,  53வது நிமிடத்தில் கிடைத்த ‘ஃபிரீ கிக்’ வாய்ப்பை லூயிஸ் ஆகியோர்  கோலாக்கினார்.எனவே மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. கூடுதல் கோலடித்தால் அடுத்தச் சுற்று வாய்ப்பு என்ற நிலையில்  ஆட்டத்தின் 56, 87 நிமிடங்களில் மெக்சிகோ அடித்த 2 கோல்களும் ‘ஆஃப் சைடு’ கோல்களாக அறிவிக்கப்பட்டன.   அதனால் மெக்சிகோ வீரர்களும், ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆட்டத்தின் முடிவில் வழங்கப்பட்ட  கூடுதல் நேரத்தில் சவூதி அரபேியா கோலடித்து  மெக்சிகோவின் அடுத்தச் சுற்று கனவை கலைத்தது. அந்த அணியின் கேப்டன் சலீம் அல்ஆட்டத்தின் 90+5வது நிமிடத்தில் அந்த  கோலை அடித்தார். அத்துடன் ஆட்டம் முடிவுக்கு வர மெக்சிகோ 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.  சவூதி 3 புள்ளிகளுடன் சி பிரிவில் கடைசி இடத்தை பிடித்து போட்டியில் இருந்து வெளியேறியது. அதே நேரத்தில்  தலா ஒரு வெற்றி, டிரா, தோல்வியை சந்தித்து தலா 4 புள்ளிகளுடன் இருந்து போலந்து, மெக்சிகோ அணிகளில் யாருக்கு 2வது இடம் என்ற கேள்வி... கோல் வித்தியாத்தில் முடிவுக்கு வந்தது. அதனால் போலந்து 2வது இடத்தை உறுதி செய்ததுடன்  நாக் அவுட் சுற்றுக்கும் முன்னேறியது.


Tags : Argentina ,Poland ,Mexico ,Saudi Arabia , Knockout round In: Argentina, Poland Out: Mexico, Saudi Arabia
× RELATED மெக்சிகோவில் கடும்...