×

வத்திராயிருப்பில் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு சேதமடைந்துள்ள நூலகத்திற்கு புதிய கட்டிடம் தேவை: மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் சேதமடைந்துள்ள நூலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பில் கிளை நூலகம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் 1 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட புத்தகங்கள் உள்ளன. நூலக வேலை நாட்களில் காலை, மாலை நேரங்களில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட வாசகர்கள் பல்வேறு வகையான நூல்கள் மற்றும் செய்தித்தாள்கள் உள்ளிட்டவைகள் படித்து வருகிறார்கள். அதோடு நாள் ஒன்றுக்கு 50க்கும் மேற்ப்பட்டோர் புத்தகங்களை தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று படித்துவிட்டு மீண்டும் மீண்டும் புதிய புத்தங்களை எடுத்துச் செல்கிறார்கள்.

இந்த நூலகத்திற்கு உள்ளுர் மட்டும் அல்லாமல் கூமாப்பட்டி, ராமசாமியாபுரம், கான்சாபுரம், நெடுங்குளம் பிளவக்கல் அணை, மகராஜபுரம், மாத்தூர், ரெங்கபாளையம், தம்பிபட்டி, கோட்டையூர், மேலக்கோபாலபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான வாசகர்கள் வந்து புத்தகங்களை படித்து வருகிறார்கள். அதோடு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை படித்து வருகிறார்கள்.

ஆனால் நூலக கட்டிடம் கட்டப்பட்ட பின் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கட்டிடம் பலத்த சேதமடைந்த நிலையில் உள்ளது. இதன்படி கட்டிட மேற்கூரையில் உள்ள சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. அதே வேளையில் ஜன்னல் கம்பிகள் பக்கமும் உள்ள சுவர்கள் சேதமடைந்துள்ளன. புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ள அலமாரியில் புத்தகங்களை எடுத்துச் செல்லும் வாசகர்கள் மீது எந்த நேரம் வேண்டுமானாலும் மேற்கூரை இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

இருப்பினும் இந்த நூலகத்திற்கு வரும் வாசகர்கள் எண்ணிக்கை குறையவில்லை. வத்திராயிருப்பு தாலுகாவாகி மூன்றரை வருடத்திற்கு மேலாகி உள்ள நிலையில், இந்த நூலகத்தை விரிவு படுத்துவதற்கான வேலையைத் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நூலகத்தின் கட்டிடப் பராமரிப்புகளை செய்ய தவறியதால் தற்போது மேற்கூரை மற்றும் ஜன்னல் கம்பிகள் பகுதிகளில் பலத்த சேதமடைந்துள்ளன. மேலும் நூலகத்தை விரிவுபடுத்தும் பணிகளையும் அதிமுக அரசு மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் நூலகத்தில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பள்ளத்தில் உள்ளதால் கனமழை பெய்தால் தண்ணீர் உள்ளே வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் புத்தகங்கள் தண்ணீரிலும் அடித்துச் செல்லப்படலாம். தற்போதுள்ள நிலையில் பள்ளத்தில் உள்ள நூலகத்தை உயர்த்திக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது சேதமடைந்த நூலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு இதே இடத்தில் புதிய நூலக கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

தற்போதுள்ள நிலையில் வேலை தேடுபவர்களும், மாணவர்களும் பல்வேறு புத்தகங்களை படித்து போட்டித் தேர்வுகளை எழுதுகின்றனர். எனவே இவர்களின் எதிர்காலத்திற்கு உதவிடும் வகையில் சேதமடைந்த நூலக கட்டிடத்தை இடித்து அகற்றவிட்டு புதிய நூலகம் கட்டித்தருவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vadruyirupu , Accommodation, damaged library, new building required, students, public demand`
× RELATED வத்திராயிருப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்...