பிரதமர் மோடி பாராட்டிய தி காஷ்மீர் பைல்ஸ் இழிவான திரைப்படம்; கோவா பட விழா நடுவர் காட்டம்

பனாஜி: தி காஷ்மீர் ஃபைல்ஸ் இந்தி படம், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம் என கோவா திரைப்பட விழா நடுவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் 1990களில் பண்டிட்டுகளை தீவிரவாதிகள் வெளியேற்றியதை பின்னணியாகக் கொண்டு தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற இந்தி படம் உருவானது. இதில் அனுபம் கெர் நடித்தார். விவேக் அக்னிஹோத்ரி இயக்கினார். இந்த படத்தை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பாராட்டியிருந்தனர். இந்நிலையில் கோவா திரைப்பட விழா கடந்த 20ம் தேதி தொடங்கி, 28ம் தேதி முடிவடைந்தது. இதில் 79 நாடுகளை சேர்ந்த 280 படங்கள் திரையிடப்பட்டன. இந்தியா சார்பில் ஜெய் பீம், தி காஷ்மீர் ஃபைல்ஸ் உள்பட 20 படங்கள் திரையிடப்பட்டன.

விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் நடுவரும் இஸ்ரேல் திரைப்பட இயக்குனருமான  நாடவ் லேபிட் பேசும்போது, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். கவுரம் வாய்ந்த இதுபோன்ற சர்வதேச திரைப்பட விழாவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரையிடப்பட்டது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த படம் எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் தருகிறது. அது பிரசார தன்மை கொண்ட ஒரு படமாகும். இது போன்ற கவுரவமான திரைப்பட விழாவுக்கு ஏற்ற திரைப்படம் இது இல்லை. இந்தத் படம் திரையிடப்பட்டதற்கு நாங்கள் வெளிப்படையாகவே அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார். அவர் பேசிய வீடியோ இணையதளங்களில் வைரலானது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: