×

கொடைக்கானல் அருகே கோணலாறு அணை உடைப்பு: கிராம மக்கள் சீரமைத்தனர்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள மேல்மலை கவுஞ்சி கிராமத்தின் நீர் ஆதாரத்திற்கும், பாசன வசதிக்காகவும் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கோணலாறு அணை. 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அணை அப்பகுதி மக்களால் கட்டப்பட்டது. இந்த அணையில் கடந்த 10 ஆண்டுகளாக மறுகால் பாயும் இடத்தில் நீர்க்கசிவு இருந்து வந்தது. இக்கசிவுநீர் ஆண்டுதோறும் அதிகரித்து வந்தது. இதுபற்றி அப்பகுதி மக்கள் தொடர்ந்து அதிகாரியிடம் தெரிவித்து வந்தனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் அணையின் மறுகாலில் இருந்த கசிவு பெரிதாகி நேற்று உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் அணைக்கு சென்று உடைப்பை அடைக்க முயன்றனர். ஆனால் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் அடைக்க முடியவில்லை. இதையடுத்து 100க்கு மேற்பட்டோர் உடனடியாக அங்கு சென்று மண் மூட்டைகள், கருங்கற்களை கொண்டு உடைப்பை சரி செய்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த கோணலாறு அணை நீர் மூலம் நாங்கள் பாசன வசதி செய்து வருகிறோம்.

இந்த அணையில் நீர்க்கசிவு இருப்பதாக பல ஆண்டுகளாக கூறி வந்தோம். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது உடைப்பு ஏற்பட்டுள்ளதால், தற்காலிகமாக மண் மூட்டைகளை வைத்து அடைத்துள்ளோம். இது எப்பொழுது வேண்டும் என்றாலும் உடைய வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் இந்த அணையை குடிமராமத்து செய்து சீரமைத்து தர வேண்டும் என்றனர்.

Tags : Konalaru ,Kodaikanal , Konalaru dam breach near Kodaikanal: Villagers repair
× RELATED ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்...