நாகர்கோவிலில் 5 நாட்கள் தங்கி இருந்த முகமது ஷாரிக்; கன்னியாகுமரி, சுசீந்திரத்தில் நாசவேலைக்கு திட்டமா?.. மங்களூரு போலீஸ் 2வது நாளாக விசாரணை

நாகர்கோவில்: நாகர்கோவிலில் 5 நாட்கள் வரை தங்கி இருந்த முகமது ஷாரிக், கன்னியாகுமரி, சுசீந்திரம் கோயில் அமைந்துள்ள பகுதிக்கு சென்றது தெரிய வந்துள்ளது.  இதன் பேரில் 2 வது நாளாக, குமரியில் மங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 19ம்தேதி, ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. விசாரணையில் இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதல் என தெரிய வந்தது. இந்த குண்டு வெடிப்புக்கு காரணமான முகமது ஷாரிக் என்பவரும் படுகாயம் அடைந்தார். இவர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

இது தொடர்பாக என்.ஐ.ஏ. மற்றும் மங்களூரு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் முகமது ஷாரிக், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தமிழகத்தில் தங்கி இருந்தது தெரிய வந்தது. இவர் தமிழகத்தில் எங்கெங்கு தங்கினார் என்பது பற்றி நடந்த விசாரணையில் கோவை, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் முகமது ஷாரிக் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே கோவை, மதுரைக்கு நேரடியாக சென்று மங்களூரு போலீசார் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக நேற்று நாகர்கோவில் வந்தனர்.

மங்களூரு இன்ஸ்பெக்டர் நிரஞ்சன் குமார் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் வந்து விசாரணையை தொடங்கினர். இதில் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள லாட்ஜில், முகமது ஷாரிக் தங்கி இருந்தது தெரிய வந்தது. அந்த லாட்ஜிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள வருகை பதிவேட்டை பார்வையிட்டனர். அப்போது போலி ஆதார் அட்டை மற்றும் போலி பெயரில் முகமது ஷாரிக் தங்கி இருந்தது தெரிய வந்தது. கடந்த செப்டம்பர் 8ம்தேதி இரவில் இருந்து 12ம் தேதி அதிகாலை வரை முகமது ஷாரிக் தங்கி இருந்துள்ளார்.

அப்போது காலையில் வெளியே செல்லும் அவர் இரவில் தான் திரும்பி வந்திருக்கிறார். லாட்ஜில் அவரை சந்திக்க யாரும் வர வில்லை என ஊழியர்கள் கூறி உள்ளனர். லாட்ஜில் இருந்து வெளியே சென்ற முகமது ஷாரிக் யாரை சந்தித்தார். அவருக்கு யார் உதவினார்கள்? என்பது தொடர்பாக தெரிய வில்லை.

கன்னியாகுமரி, சுசீந்திரம் கோயில் குறித்து லாட்ஜ் பணியாளர்களிடம், முகமது ஷாரிக் கேட்டுள்ளார். அவர் தனது பெயரை பிரேம்ராஜ் என்று கூறி இருக்கிறார்.  கோயில்களுக்கு வழிபட வந்ததாக தெரிவித்துள்ளார்.

அந்த லாட்ஜில் இருந்து ஆட்டோவில் கன்னியாகுமரி, சுசீந்திரம் கோயில்களுக்கு முகமது ஷாரிக் சென்றதாக கூறப்படுகிறது. கோயில்களுக்கு உள்ளே செல்லாமல் வெளியே சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளை முகமது ஷாரிக் நோட்டமிட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக வீடியோ காட்சிகள் எதுவும் உள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். நாகர்கோவிலில் இருந்து 12ம்தேதி அதிகாலையில் ரயில் மூலம் திருவனந்தபுரம் சென்றுள்ளார். எனவே நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் மங்களூரு போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

முகமது ஷாரிக் மட்டும் தான் மேற்கண்ட பகுதிகளுக்கு சென்றாரா? அல்லது குமரி மாவட்டத்தில் இருந்து யாராவது அவருக்கு உதவி புரிந்தார்களா? என்பது தெரிய வில்லை. கன்னியாகுமரி, சுசீந்திரம் பகுதிகளை நோட்டமிட்டது ஏன்? என்பதும் மர்மமாக உள்ளது. கன்னியாகுமரியில் நவம்பர் முதல் ஜனவரி வரை சீசன் கால கட்டமாக கருதப்படுகிறது. இந்த கால கட்டங்களில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள், சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலையசுவாமி கோயிலுக்கும் செல்வது வழக்கம்.

எனவே இந்த சமயங்களில் நாசவேலைக்காக திட்டமிட்டு முகமது ஷாரிக் கன்னியாகுமரி, சுசீந்திரம் பகுதிக்கு சென்று இருக்கலாமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே தற்போது கன்னியாகுமரி, சுசீந்திரம் கோயில்களில் பாதுகாப்பு  அதிகரிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அசாம் வாலிபரிடம் விசாரணை

ஷாரிக்கை நாகர்கோவிலில் இருந்து பாஸ்ட்புட் கடை பணியாளர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு இருந்தார். விசாரணையில் அந்த வாலிபர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அந்த வாலிபரிடம் சுமார் 30 மணி நேரம் விசாரணை குமரி மாவட்ட போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தனது பாஸ்ட்புட் கடை உரிமையாளரின் மனைவியின் செல்போன் நம்பருக்கு வந்த அழைப்பில் ஹிந்தியில் வாலிபர் பேசினார்.

அவருக்கு ஹிந்தி தெரியாதது என்பதால், தன்னிடம் இது குறித்து தெரிவித்தார். அதன் பேரில் அந்த நம்பரை தொடர்பு ெகாண்டேன் என்றார். விசாரணையில் சாதாரணமாக வந்த ஒரு அழைப்பின் பேரில் ஷாரிக் பயன்படுத்திய செல் நம்பரை தொடர்பு கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் விடுவித்தனர். அவரிடமும் மங்களூர் போலீசார் இன்று விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற்றனர்.

Related Stories: