×

பொன்னாலம்மன் சோலையில் கொற்றவை வழிபாட்டை வலியுறுத்தும் பெண் உருவ சிலை கண்டுபிடிப்பு

உடுமலை:  திருமூர்த்தி மலை அருகே உள்ள பொன்னாலம்மன் சோலையில் கொற்றவை வழிபாட்டை வலியுறுத்தும் பெண் உருவ சிலை கண்டுபிடிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலைக்கு அருகில் உள்ளது பொன்னாலம்மன் சோலை. இங்கு ஜெயக்குமார் என்பவரது தோட்டத்திற்கு அருகில்  பாலம் கட்டுவதற்காகக் குழி தோண்டப்பட்டது.

அப்போது  சுமார் 10 அடி ஆழத்தில்  அழகான  பெண் உருவ சிலை கிடைத்தது. இது குறித்து உடனடியாக  விஏஓ மற்றும் ஆர்ஐ ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினருக்கும் சிலை கிடைத்த தகவல் கிடைக்கப் பெற்றது. அந்த கற்சிலையை ஆய்வு செய்ததில் அது சுமார் ஆயிரம் காலத்திற்கு முற்பட்ட  அம்மன் (கொற்றவை) வழிபாட்டை உறுதிப்படுத்தும் சிலை எனவும், இதனை பூதேவி, பார்வதிதேவி எனும் பெயரில்  வழிபட்டிருக்கலாம் எனவும் தெரிகிறது.

கற்சிலையில் மார்பில் அழகான கச்சை இருப்பதாலும், கழுத்தில் அட்டிகை போன்ற நல்ல ஆபரணங்கள் இருப்பதாலும் இது  பிற்காலத்தில் பெண் தெய்வ வழிபாட்டிற்காக போற்றப்பட்டு வந்த சிவகாமசுந்தரி, அழகு நாச்சியம்மன், மாரியம்மன், காளியம்மன், அங்காளம்மன்  என்று அழைக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த கற்சிலை இரண்டடி உயரத்தில் அரை அடி அகலத்தில்  மிகவும் அற்புதமான கலை வடிவத்தில் செதுக்கப்பட்டதைப் பார்த்தால்  பொன்னாலம்மன் சோலையில்  பெண் தெய்வ வழிபாடு இருந்ததும், தாய் தெய்வ வழிபாட்டை வலியுறுத்தும் வகையில் இந்த பெயர்  அமைந்திருப்பதும் தெரியவருவதாக உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின்  வரலாற்று பேராசிரியர் ராபின்,  பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி  வரலாற்று ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், ‘‘சிலையில் முகம் மற்றும் கை,கால்களில் அணிந்திருக்கும் ஆபணரங்களின் கலை வடிவங்கள் மிகவும் நேர்த்தியாகவும், மக்கள் வழிபாட்டில் ஏற்கனவே இருந்ததையும் உறுதிப்படுத்துகிறது. ஏற்கனவே பொன்னாலம்மன் சோலையில் ஆய்வு செய்தபோது திருமூர்த்தி அணையிலிருந்து மேற்கே செல்லும் பாலாற்றங்கரையில் கோயில்கள் இருந்ததும், அப்பகுதியில் பெண் தெய்வ வழிபாடு இருந்ததும், இப்பகுதி ஆதிகுடிகள் பழங்காலத்தில் வழிபட்டு வந்ததும் தெரியவந்திருந்தது. இங்கிருக்கும் திருமூர்த்தி மலைப்பகுதி என்பது சங்க காலத்தில் உம்பற்காடு என இருந்ததையும், பழமையான ஆதி குடிகளின்  தொன்மையான தாய் தெய்வ வழிபாட்டை வலியுறுத்துவதாக இந்தப் பகுதி இருந்ததையும் இந்த சிலை உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags : Discovery of a female idol in Ponnalamman oasis emphasizing the cult of Koravai
× RELATED இந்திய – இலங்கை கடல் எல்லையில்...