விமான நிலையத்தில் சேட்டிலைட் போன் பயன்படுத்திய ரஷ்ய மாஜி அமைச்சர் அதிரடி கைது: உத்தரகாண்ட் போலீஸ் நடவடிக்கை

டேராடூன்: டேராடூன் விமான நிலையத்தில் சேட்டிலைட் போன் பயன்படுத்திய ரஷ்ய முன்னாள் அமைச்சரை உத்தரகாண்ட் போலீசார் கைது செய்தனர்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின் போது ரஷ்ய முன்னாள் அமைச்சர் விக்டர் செமனோவ் (64) என்பவர், சேட்டிலைட் போனை பயன்படுத்தி புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தார்.

அதைபார்த்த சிஐஎஸ்எஃப் வீரர்கள், அவரை சுற்றிவளைத்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து டோய்வாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சா கூறுகையில், ‘விமான நிலைய பாதுகாப்பு சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான முறையில்  வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் சேட்டிலைட் போன் மூலம் புகைப்படம் எடுத்துக்  கொண்டிருந்தார். தன்னை வனவிலங்கு புகைப்படக் கலைஞர் என்றும், ருத்ரபிரயாக்கின் சுற்றுலாத் தலமான சோப்தாவில் நான்கு நாட்கள் தங்கியிருந்ததாகவும், இண்டிகோ  விமானத்தில் டெல்லிக்கு செல்ல வேண்டும் என்றும் கூறினார்.

அவரிடம் விசாரித்ததால், அவர் ரஷ்ய முன்னாள் அமைச்சர் விக்டர் செமனோவ் என்பது தெரியவந்தது. 1998-99ம் ஆண்டுவாக்கில் ரஷ்யாவின் விவசாயம் மற்றும் உணவு அமைச்சராக இருந்துள்ளார். சேட்டிலைட் போன் குறித்து அவரிடம் கேட்டபோது, ​​இந்தியாவில் சேட்டிலைட்  போன் எடுத்துச் செல்வது சட்டப்படி குற்றம் என்பது தனக்குத் தெரியாது  என்றார். அவசரகாலத்தில் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக செயற்கைக்கோள் தொலைபேசியைப் பயன்படுத்தியதாகக் கூறினார்.

ஆனால், அதை நிரூபிக்கும் ஆவணங்கள் எதையும் அவர் சமர்ப்பிக்கவில்லை. அதனால் அவரின் போர்டிங் பாஸ் ரத்து செய்யப்பட்டது; பின்னர் அவர் டேராடூன் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் அவரைக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றன. அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1,000 அபராதம் செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டார். அவரிடம் இருந்து சேட்டிலைட் போன் பறிமுதல் செய்யப்பட்டது’ என்றார்.

Related Stories: