×

உலக கோப்பை கால்பந்து 2022: அமெரிக்கா - இங்கிலாந்து டிரா.! துனிசியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

தோஹா: உலக கோப்பை பி பிரிவில் இங்கிலாந்து - அமெரிக்கா மோதிய லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது. லுசெய்ல் அரங்கத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், தனது முதல் லீக் ஆட்டத்தில் ஈரானை 6-2 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்த இங்கிலாந்து (5வது ரேங்க்) அணியே ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்கா (16வது ரேங்க்) தனது முதல் ஆட்டத்தில் வேல்ஸ் அணியுடன் டிரா செய்திருந்தது.  ஹாரி கேன் தலைமையில் இங்கிலாந்து வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாடி கோல் அடிக்கும் முயற்சியில் இறங்க, அதற்கு ஈடுகொடுத்து அமெரிக்க வீரர்களும் மல்லுக்கட்ட ஆட்டம் பரபரப்பானது. இரண்டு தரப்பும் மாறி மாறி  எதிர்தரப்பு கோல் பகுதிகளை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர்.

ஆனாலும், கோல் கீப்பர்கள் பிக்ஃபோர்ட் (இங்கிலாந்து) மற்றும் டர்னர்(அமெரிக்கா) துடிப்புடன் செயல்பட்டதால் கோல் விழும் வாய்ப்புகள் கைநழுவிப் போயின. அப்படி இங்கிலாந்து 8 முறையும், அமெரிக்கா 10 முறையும் செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்காததால் ஆட்டம் 0-0 என கோலின்றி சமனில் முடிந்தது. பி பிரிவில் இங்கிலாந்து 4 புள்ளிகளுடன்  முதல் இடத்திலும்,  அமெரிக்கா 2 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன. இந்தப் பிரிவில் உள்ள ஈரான் (3 புள்ளி), வேல்ஸ் (1 புள்ளி)  உட்பட  எல்லா அணிகளும் இன்னும் ஒரு ஆட்டத்தில் விளையாட வேண்டி உள்ளது. நான்கு அணிகளுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் நீடித்தாலும், இங்கிலாந்துக்கான வாய்ப்பு கூடுதல் பிரகாசமாக உள்ளது.

துனிசியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

உலக கோப்பை கால்பந்து டி பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் துனிசியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. 23வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் மிட்ச் டியூக் அபாரமாக கோல் அடிக்க, அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. 2வது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் எடுபடவில்லை.

46 சதவீத நேரம் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த துனிசியா வீரர்கள் 12 முறை கோல் போட முயற்சித்த நிலையில், 4 ஷாட்கள் கோல் பகுதியை நோக்கி அமைந்தன. அதே சமயம்,  பந்தை 38% நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆஸி. அணி அடித்த 5 ஷாட்களில் 2 மட்டுமே எதிரணி கோல் கீப்பருக்கு சவாலை கொடுத்தன. அதில் டியூக் அடித்த ஒற்றை கோல் ஆஸி.க்கு வெற்றி தேடித் தந்தது. ஆட்ட நேர முடிவில் அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்று 3 புள்ளிகளை தட்டிச் சென்றது. துனிசியா தரப்பில் 3 வீரர்கள் மஞ்சள் அட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.



Tags : World Cup Soccer 2022 ,USA ,England ,Australia ,Tunisia , World Cup Soccer 2022: USA - England Draw! Australia defeated Tunisia
× RELATED அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் அடங்காத காட்டுத்தீ பலி 16 ஆக அதிகரிப்பு