ரவுடிகளுக்கு அடைக்கலம் தரும் கட்சி; சுகேஷை பாஜக தேசிய தலைவராக்குங்கள்: டெல்லி முதல்வர் பரபரப்பு பேச்சு

புதுடெல்லி: டெல்லி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரை பாஜகவின் தலைவராக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘டெல்லி மாநகராட்சியை கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. குஜராத்தில் 27 ஆண்டுகளாக ஆட்சி செய்கிறது. இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்யும் அவர்கள், என்ன செய்தார்கள் என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை.

அதனால்தான் சிறையில் உள்ள கைதி சுகேஷ் சந்திரசேகர் எழுதியதாக கூறப்படும் ‘காதல்’ கடிதங்களை வெளியிடுகின்றனர். பாஜக போடும் தாளத்திற்கு சுகேஷ் சந்திரசேகர் ஆட்டம் போடுகிறார். சுகேஷ் சந்திரசேகரை தங்களது கட்சியின் நட்சத்திர பேச்சாளராக பாஜக முன்னிறுத்த வேண்டும். அவரை குஜராத் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு அனுப்ப வேண்டும். மேலும் பாஜகவின் தேசிய தலைவராக சுகேஷ் சந்திரசேகரை நியமிக்க வேண்டும். நாட்டிலுள்ள அனைத்து ரவுடிகளும், குற்றவாளிகளும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு கட்சிக்குச் செல்கிறார்கள்; அந்தக் கட்சி அவர்களுக்கு பாதுகாப்பை அளித்து வருகிறது.

அந்த வகையில், ​​சுகேஷ் சந்திரசேகர் தனக்கு பாதுகாப்பு அளிக்கும் கட்சிக்காக ‘பேட்டிங்’ செய்து வருகிறார்’ என்றார். முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன், பணமோசடி வழக்கில் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் குறித்து, கைதி சுகேஷ் சந்திரசேகர் டெல்லி ஆளுநருக்கு பரபரப்பு கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: