×

பெரம்பூர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 93 வகையான நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய கலைத் திருவிழா: 2,450 மாணவிகள் பங்கேற்பு

பெரம்பூர்: பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக் கொண்டுவரும் வகையில், அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர் நல பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளில் கலைத் திருவிழாக்களை நடத்த தமிழக அரசு அறிவுறுத்தியது. பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் இதில் கலந்துகொண்டு தங்களின் தனித் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்றும், இதற்கு பள்ளி ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்பேரில், அரசு பள்ளிகளில் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவிக நகர் தொகுதிக்குட்பட்ட 71வது வார்டு பெரம்பூர் பள்ளி சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று கலைத் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பள்ளியில் பயிலும் 2450 மாணவிகள் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். இதில், தமிழர்களின் கலாச்சாரத்தை போற்றும் பரதநாட்டியம், கிராமிய நடனம், கோலாட்டம், பறை உள்ளிட்ட பல்வேறு நாட்டிய நிகழ்ச்சிகளும் மாணவிகளின் தனித்திறமையை வெளிப்படுத்தும் ஓவியப்போட்டி, பேச்சு போட்டி, கவிதை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் என 93 வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மேலும், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வெற்றி பெறும் மாணவிகள், மண்டல அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள்.

இதுகுறித்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வகுமாரி கூறுகையில், ‘பொதுவாக பள்ளிகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட மாணவ, மாணவிகள் மட்டுமே கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்துவார்கள். ஆனால், இந்த கலைத் திருவிழாவில் ஏதாவது ஒரு போட்டியிலாவது கண்டிப்பாக, ஒவ்வொரு மாணவியும் கலந்துகொள்ள வேண்டும். இதன்மூலம், அவர்களின் தனித் திறமை வெளிப்படும். இதனால், மாணவ, மாணவிகள் தங்களுக்குள் உள்ள திறமைகளை வெளிக்காட்ட இது ஒரு வாய்ப்பாக அமையும்,’ என்றார். இந்நிகழ்ச்சியில், பெரம்பூர் 71வது மாமன்ற உறுப்பினர் புனிதவதி எத்திராஜ் கலந்துகொண்டு மாணவிகளை உற்சாகப்படுத்தினார்.

Tags : Weed Art Festival ,Perambur Girls High School , Weed Festival with 93 programs at Perambur Girls High School: 2,450 students participate
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...