×

செய்யாறு அரசு கல்லூரியில் கோழிகளை தாக்கும் வெள்ளை கழிச்சல் நோயை கட்டுப்படுத்தும் மருந்திற்கான மூலப்பொருள் கண்டுபிடிப்பு-ஆராய்ச்சிமாணவர் சாதனை

செய்யாறு : செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் விலங்கியல் துறை பேராசிரியரின் மேற்பார்வையில் ஆராய்ச்சி மாணவர் கோழிகளைத் தாக்கும் வெள்ளை கழிச்சல் (நியூ கேஸ்டில் வைரஸ்) நோய்க்கு மருந்து கண்டுபிடித்து முனைவர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் ஞா.பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில்  எம்பில் மற்றும் பிஎச்டி படிப்புகளில் மாணவ மாணவிகள் படித்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு ஆய்வு கட்டுரைகளைச் சமர்ப்பித்து வருகின்றனர். இவர் உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் பல்வேறு துறைகளிடமிருந்து ஆராய்ச்சி நிதிகளைப் பெற்று ஆராய்ச்சி செய்து வருகிறார். இவர் ராணிப்பேட்டை கால்நடை தொற்று நோய் தடுப்பு மருந்து ஆராய்ச்சி நிலையத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் பத்மராஜ் மற்றும் வேலூர் மைக்ரோலேப் இயக்குனர் சிவமணி ஆகியோர் உதவியுடன் கோழிகளுக்கு அதிக இறப்பை ஏற்படுத்தும் நியூகேஸ்டில் வைரஸ் நோய் என்கிற வெள்ளைக் கழிச்சல் நோய் பற்றி இவர் ஆய்வு மேற்கொண்டார்.

இவ்வைரசினால் கோழிப்பண்ணையில் அதிக அளவில் இறப்பு ஏற்படுத்துவதால் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படுத்துகிறது. இது குறித்து ஆராய்ச்சி மாணவர் என்.கார்த்திகேயன் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தார். இவ்வாராய்ச்சியின் முடிவில் ஆண்டோகிராயிக் பெனிகுலேட்டா தாவர அறிவியல் பெயர் கொண்ட நிலவேம்பில் எண்ணற்ற பைட்டோ கெமிக்கல் பொருட்கள் அடையாளம் காணப்பட்டு இதன் முதன்மையான கூறுகளான கிளைக்கேசைட்ஸ், பீனால், டேனின், அல்கலாய்டு, பிளாவானாய்டுகள், ஸ்டீராய்டுகள் கண்டறியப்பட்டன.

இம்மூலப்பொருட்களை நீரில் கலந்து கொடுப்பதன் மூலம் நியூகாஸ்டல் வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தப்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கோழிகளின் இறப்பைக் கட்டுப்படுத்தலாம். இம்மூலக்கூறுகள் செலவு குறைவானவை, பக்க விளைவு அற்றவை, சுற்றுச் சூழலுக்கு உகந்தவை ஆகும். கோழியை உண்ணக்கூடிய மனிதர்களுக்கு ஆண்டிபயாடிக் எச்சம் செல்வதைத் தடுக்கப்படுகிறது.

இந்த ஆராய்ச்சியின் படைப்பைக் கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும் விலங்கியல் துறையில் சென்னை நந்தனம் ஆண்கள் கலைக்கல்லூரி பேராசிரியர் கு.ஏழுமலை, வேதியியல் துறைத் தலைவர். சி.த.ரவிச்சந்திரன், விலங்கியல் துறைத் தலைவர்  நா.புனிதா, முன்னாள் விலங்கியல் துறைத் தலைவர் ச.துரைராஜ் முன்னிலையில் ஆராய்ச்சியாளர் என்.கார்த்திகேயனுக்கு முனைவர் பட்டம் வழங்க பரிந்துரைக்கபட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் ந.கலைவாணி, கல்லூரி பிற துறையை சேர்ந்த தலைவர்கள் கண்ணன், முருகேசன், ராமலிங்கம் மற்றும் பேராசிரியர்கள் ஆராய்ச்சி மாணவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.



Tags : Govt College ,Seyyar , Seyyar: Under the supervision of the Professor of Zoology at the Anna Govt. College of Arts, Seyyar, the research student chickens
× RELATED உலக மலேரியா தின விழிப்புணர்வு...