திட்டக்குடி அருகே வேகமாக நிரம்பும் வெலிங்டன் நீர்த்தேக்கம்: தண்ணீரை திறந்துவிட கோரிக்கை

திட்டக்குடி: திட்டக்குடி அருகே உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கம் வேகமாக நிரம்புவதால் தண்ணீரை திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி, ஆவினங்குடி, ராமநத்தம், ஆவட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் திட்டக்குடியை அடுத்துள்ள கீழ்செருவாய் கிராமத்தில் அமைந்துள்ள வெலிங்டன் நீர்தேக்கத்தின் முழு கொள்ளளவான 29.72 அடியில், தற்போது பெய்த மழையினாலும், அணைக்கட்டில் இருந்து வரத்து வாய்க்கால் மூலம் பெறப்பட்ட தண்ணீராலும் மற்றும் சிறு,சிறு ஓடைகளில் இருந்து பெறப்பட்ட தண்ணீராலும், நீர்மட்டம் சுமார் 27.5 அடியாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தொழுதூர் அணைக்கட்டில் இருந்து வரத்து வாய்க்கால் மூலம் வெலிங்டன் நீர்தேக்கத்திற்கு வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. சிறு சிறு ஓடையில் இருந்து தண்ணீர் நீர்தேக்கத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் ஒரு பகுதி கரை உள்வாங்கி இருப்பதால் நீர்த்தேக்கம் கடல் போல் காட்சியளிக்கிறது. வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு கருதியும், விவசாயிகளின் நலன் கருதியும், பாசன வாய்க்காலில் தண்ணீரை திறந்து விட வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீர் வரத்து அதிகரிப்பால், சுமார் 24 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Stories: