செல்போனில் ஆபாச பேச்சு: பெண் நிர்வாகி, ஆண் நிர்வாகியிடம் திருப்பூர் பாஜ ஆபீசில் விசாரணை

திருப்பூர்: செல்போனில் வாக்குவாதம், ஆபாச பேச்சு தொடர்பாக திருப்பூர் பாஜ அலுவலகத்தில் டெய்சி, திருச்சி சூர்யாவிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. திருச்சியை சேர்ந்தவர் சூர்யா. தமிழக பாஜ ஓபிசி அணி (சிறுபான்மை அணி) மாநில செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். யூடியூப் சேனலில் மருத்துவ குறிப்புகளை வழங்குவதில் பிரபலமானவர் டெய்சி சரண். கடந்தாண்டு பாஜவில் இணைந்த டெய்சி சரணுக்கு, சிறுபான்மை அணி தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் சிறுபான்மை அணியில் நிர்வாகிகளுக்கு பதவி வழங்குவதில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இருவருக்கும் செல்போனில் கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது சூர்யா, அவரது நடத்தையை பற்றி  கேவலமாக பேசியதோடு, கொலை மிரட்டலும் விடுத்தார். மேலும் மோடி, அமித் ஷா, நட்டா யார் கிட்ட வேண்டுமானாலும் போ, எனக்கு கவலை இல்லை என்று சூர்யா சவால் விடுத்து பேசினார். பதிலுக்கு டெய்சியும் சவால் விடுத்து பேசினார். மாறி, மாறி அச்சில் ஏற்ற முடியாத ஆபாச வார்த்தைகளில் இருவரும் திட்டிக்கொண்டனர். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இச்சம்பவம் தொடர்பாக இருவரிடமும் திருப்பூரில் விசாரணை நடத்தப்படும் என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். அதன்படி இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டது. விசாரணைக்காக திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட பாஜ அலுவலகத்தில் பாஜ சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா ஆகியோர் இன்று ஆஜராகினர். இருவரிடமும் பாஜ மாநில துணைத்தலைவர் கனகசபாபதி, மாநில செயலாளர் மலர்கொடி ஆகியோர் அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணை குறித்த அறிக்கை தலைமைக்கு அனுப்பப்படும் என விசாரணை கமிட்டியினர் தெரிவித்தனர்.

Related Stories: