கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்தது தொடர்பாக கடந்த 23.6.2015ல் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 15 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

கோகுல்ராஜின் தாய் சித்ரா மனுவையடுத்து வழக்கு, நாமக்கல் நீதிமன்றத்தில் இருந்து மதுரை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு (வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்) கடந்த 8.5.2019ல் மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மார்ச் 8ல் தீர்ப்பளித்த மதுரை நீதிமன்றம், யுவராஜ் உட்பட 10 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், 5 பேரை விடுதலை செய்தும் உத்தரவிட்டது. இந்த தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்தனர். அதே நேரத்தில் கோகுலராஜ் தயார் மற்றும் சிபிசிஐடி, சிபிஐ தரப்பினர் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு இந்த தண்டனை உறுதிப்படுத்த வேண்டும் என்று பல்வேறு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் சுவாதியை விசாரிக்க வேண்டியது மிகவும் கடமையாக உள்ளது. ஏனென்றால் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட சுவாதி எவ்வாறு குரல் சாட்சியாக மாறினார? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தான் இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்க முடியும் எனவே நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாதியின் குடும்பத்தினருக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அவரது குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். நீதிமன்றத்திற்கு அவர் தைரியமாக வந்து சாட்சி சொல்லும் அளவுக்கு அந்த பாதுகாப்பு இருக்க வேண்டும். என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: