கிருஷ்ணகிரி அருகே பயங்கரம்: கழுத்தறுத்து பாஜ நிர்வாகி கொலை

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே பாஜ நிர்வாகி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரின் சடலத்தை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வேப்பாளம்பட்டி அருகேயுள்ள தனியார் கல்குவாரிக்கு செல்லும் பகுதியில் இன்று காலை கழுத்தறுக்கப்பட்ட நிலையில் 52 வயது மதிக்கதக்க நபர் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள், ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஊத்தங்கரை டிஎஸ்பி அமலஅட்வின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.

அதில், கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தவர், திருப்பத்தூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் களிக்கண்ணன் (52) என்பது தெரியவந்தது. இவர், திருப்பத்தூர் நகர பாஜ துணை தலைவராக இருந்துள்ளார். அந்த பகுதியில் இரும்பு கடை வைத்து, பைனான்ஸ் தொழிலும் செய்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கிருஷ்ணகிரி எஸ்பி சரோஜ்குமார் தாகூர், பர்கூர் டிஎஸ்பி மனோகரன் ஆகியோரும் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவர் தொழிலில் உள்ள முன்விரோத தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணம் உள்ளதா? அவரை மர்ம நபர்கள் வேறு எங்கேயேனும் கொலை செய்துவிட்டு பின்னர் சடலத்தை இங்கு வீசிச்சென்றனரா? அல்லது ஊத்தங்கரை பகுதியில் வந்தபோது அவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: