×

செய்யாறு அருகே சின்ன செங்காட்டில் பல்லவர் கால விஷ்ணு துர்க்கை கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம், செங்காடு மதுரா சின்ன செங்காடு கிராமம் உள்ளது. இந்த ஊரின் ஏரிக்கரையின் வடக்கு பகுதியில் உள்ள வயல்வெளியில் பல்லவர்கால விஷ்ணு துர்க்கை எனும் கொற்றவை புடைப்புச் சிற்பத்தை வரலாற்று ஆய்வாளர் எறும்பூர் கை.செல்வகுமார் கண்டெடுத்தார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவதுூ சின்ன செங்காடு வயல்வெளியில் உள்ள விஷ்ணு துர்க்கை எனும் கொற்றவை சிற்பம் திறந்தவெளியில் வரப்போரமுள்ள வேப்ப மரம் அருகில் உள்ளது. இப்படைப்புச் சிற்பம் அருகில் ஒதிய மரம் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்னர் அகற்றப்பட்டுள்ள அடையாளம் உள்ளது. பழந்தமிழர் தாய் தெய்வ வழிபாட்டில் கொற்றவைக்கு தனி இடம் உண்டு.

பாலை நில கடவுளாகவும், வேட்டைக்குச் செல்வோர், போருக்கு செல்வோர் வழிபடும் கடவுளாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் தீமையை அழிக்க வந்த கடவுளாகவும் வட இந்தியா முதல் தமிழகம் உள்ளிட்ட பகுதிகள் வரை துர்க்கை வழிபாடு நடந்து வருகிறது. தமிழகத்தில் அண்மைக்காலமாக ராகுகால துர்க்கை வழிபாடு புகழ்பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த ஊரில் துர்க்கை அம்மனாக தொன்று தொட்டு வழிபாடு நடத்தி வரும் இச்சிலை விஷ்ணு துர்க்கை எனும் கொற்றவை புடைப்புச் சிற்பம் மேற்கு திசை நோக்கி ஏரிக்கரையின் வடக்கே உள்ளது. இதன் உயரம் 133 சென்டிமீட்டரும், அகலம் 78 சென்டிமீட்டரும் ஆகும்.

கரண்ட மகுடம், காதுகளில் பத்திர குண்டலங்களுடன், கழுத்தில் சரபலி, மார்பு கச்சை, தோள்பட்டையுடன், இடுப்பில் அரையாடை முடிச்சுடன் உள்ளது.
நான்கு கரங்களில் சங்கு, சக்கரம், அபயம், கடி ஹஸ்தங்கள் காட்டப்பட்டுள்ளன. புடைப்பு சிற்பத்தின் கீழ் வலது பக்கம் தன் தலையை தானே அறிந்து நவகண்டம் கொடுத்துக் கொள்ளும் வீரனும், மறுபுறம் வணங்கும் நிலையில் ஒரு அடியாரும் உள்ளனர். கொற்றவை எருமை தலையின் மீது நின்ற நிலையில் உள்ளார்.

செய்யாறு பகுதிகளில் எட்டு கரங்களுடன் கூடிய கொற்றவை சிலைகள் பல காணப்பட்டாலும் இக் கொற்றவை சிலை நான்கு கரங்களுடன் உள்ளது என்பது சிறப்புடையதாக உள்ளது. மேலும் இந்த வகை புடைப்பு சிற்பத்தின் ஒழுங்குமுறையை வைத்து பல்லவர் காலத்தின் 7ம் நூற்றாண்டிற்கும் 8ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட கால கட்டத்தை சேர்ந்தவையாக கருதவேண்டியுள்ளது. இவ்வாறு வரலாற்று ஆய்வாளர் எறும்பூர் கை.செல்வகுமார் தெரிவித்தார்.


Tags : Sindna Chengad ,Diru , Pallavar period Vishnu Durga sculpture discovered at Chinna Sengat near Cheyyar
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்வு