திருவள்ளூரில் கன மழை சென்னை குடிநீர் ஏரிகளின் நீர்மட்டம் உயர்கிறது: செம்பரம்பாக்கத்தில் உபரிநீர் திறப்பு

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் ஏரி உள்பட ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல்  மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக, பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த் தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் நேற்றைய நிலவரப்படி 1988 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. வரத்து கால்வாய்கள் மூலமாக 340 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் நேற்றைய நிலவரப்படி 2500 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மழையின் காரணமாக, வரத்து கால்வாய்கள் மூலமாக 192 கன அடி‌ நீர் வருகிறது. சென்னை மக்களுக்காக 192 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது 435 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. கால்வாய்கள் மூலமாக 194 கன‌அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

கும்மிடிப்பூண்டி அருகே கண்ணன்கோட்டையில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி முழு கொள்ளளவை எட்டி 500 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 2484 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. மழையின் காரணமாக வரத்து கால்வாய்கள் மூலமாக 58 கன அடி நீர் வந்துகொண்டு இருக்கிறது. நீர்வரத்து அதிகரித்து வருவதால் 139 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 108 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related Stories: