×

ஆவடி அருகே கவுன்சலிங்குக்கு அழைத்து மாணவிகளிடம் அத்துமீறல் போக்சோவில் வழக்கு பதிவு; பள்ளி நிர்வாகி தலைமறைவு

சென்னை: கவுன்சலிங்குக்கு அழைத்து மாணவிகளிடம் அத்துமீறிய பள்ளி நிர்வாகி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆவடி அடுத்த திருநின்றவூர், லக்ஷ்மிபுரம் பகுதியில் தனியார் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியின் தாளாளர் சிந்தை ஜெயராமன் (70). இவரது மகன் வினோத் (38). இவருக்கு திருமணமாகி மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர், இந்த பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவிகளிடம், கவுன்சலிங் என்ற பெயரில் தனி அறைக்கு அழைத்துச் சென்று, மிரட்டி பாலியில் சீண்டலில் ஈடுபட்டதாகவும், ஆசிரியைகளிடமும் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதை வெளியில் கொண்டு வரும் வகையில், நேற்று முன்தினம் மாலை பள்ளியின் பிளஸ் 2 மாணவர்கள் இரு பிரிவாக பிரிந்து கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் மற்றும் பத்திரிகையாளர்கள் வந்தால் தெரியப்படுத்த திட்டமிட்டுளளனர். ஆனால், பள்ளி நிர்வாகம் மாணவர்களை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை 9 மணியளவில், பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு தாளாளர் ஜெயராமனிடம் வாக்குவாதம் செய்தனர். இது ஒருபுறம் இருக்க மாணவர்களும் மற்றொருபுறம் வினோத்தை கைது செய்ய வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சு நடத்தினர். ஆனாலும், மாணவர்கள் சென்னை - திருத்தணி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். உடனே, மாணவர்கள் வெளியே செல்லாதவாறு பள்ளி வாயிலை அடைத்தனர். இதில், மாணவர்கள் பள்ளியின் மற்றொரு வாயில் வழியாக சாலைக்கு செல்ல முயன்றனர். அப்போது, போலீசார் தடுத்து நிறுத்திய போது இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் சில மாணவர்களை தாக்கியுள்ளனர். தொடர்ந்து, பேச்சுவார்த்தைக்கு பிறகு மாணவர்கள் வகுப்புக்கு செல்வது போல் சென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, பள்ளி நிர்வாகி வினோத், கடந்த சில நாட்களாக தலைமறைவாக உள்ள நிலையில் அவர் மீது திருநின்றவூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தகவலறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், ஆவடி வட்டாட்சியர் வெங்கடேஷன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாதினி உள்ளிட்டோர் வந்து சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். இறுதியில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி சென்றனர். காலை 9 மணிக்கு தொடங்கிய மாணவர்களின் போராட்டம் மாலை 4 மணி அளவில் முடிவுக்கு வந்தது.

Tags : POCSO ,Aavadi , A case has been registered in POCSO for assaulting girls by calling them for counseling near Aavadi; The school administrator absconded
× RELATED பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 5 ஆண்டுகள்...